சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை  நடத்தினார்.
இந்த ஆலோசனையில்,  24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை, அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைப்பு, தயார் நிலையில் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள், நடமாடும் மருத்துவக் குழு, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்பட அனைத்தும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.


இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்புடைய துறைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே, முதலமைச்சரின் உத்தரவுப்படி தலைமை செயலாளர் க.சண்முகம் தலைமையில் 18.9.2020 அன்று வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆயத்த நிலை குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்களுடன் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் ஆயத்த பணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்படும் 4133 பகுதிகள்
வடகிழக்கு பருவமழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,133 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14,232 பெண்கள் உள்ளிட்ட 43,409 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்கள், தயார் நிலையில் உள்ளனர். கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் மற்றும் 691 ஊர்காவல் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
6016 தடுப்பணைகள்
பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளாக 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11,482 கசிவுநீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,299 ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன.
4,154 கிலோ மீட்டர் நீளம் ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 9,616 ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 7,989 ஆக்கிரமிப்புகள் நீர்நிலைகளிலிருந்து அகற்றப் பட்டுள்ளன. 7.53 கோடி கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டு, 6,70,864 விவசாயிகள் பயன்பெற்றனர். 2.55 டி.எம்.சி. கூடுதல் நீரினை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 11,387 பாலங்கள் மற்றும் 1,09,808 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மையங்கள்
மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பு உள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 ஜெ.சி.பி. இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை பேரிடர்களின் காரணமாக எழும் சிக்கல்களை தீர்க்கவும், குறிப்பாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மின்கம்பங்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை
மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), TNSMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பருவமழை காலத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
* பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறை அலுவலர்களின் செயல் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முககவசம் கட்டாயம்
* பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகள், கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றி, 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க வேண்டும்.
* பேரிடர் காலங்களில் கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும், முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும்.
* தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும்.
* பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்கள், சமூக இடைவெளியுடன் தங்க வைக்க போதுமானதாக உள்ளதா என ஆய்வு செய்து, தேவைப்படின் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
விழுந்த மரங்கள் உடனடி அகற்றம்
* மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளிச்சிங் பவுடர், மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.
* தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், போதுமான அளவு மருந்துகள் இருப்புடன், தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், மருத்துவமனையிலுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள்
* பேரிடர் காலங்களில் இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள், நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அனைத்து மாவட்டங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில், பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
* வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்
இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் ஜெ.கே.திரிபாதி,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சால்,
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் நிர்மல் ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே.பாஸ்கரன், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிசாமி, காவல் துறை தலைவர் சி.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.