சென்னை.
தற்போது பரோலில் வந்திருக்கும் சசிகலாவை அமைச்சர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கல்லீரல் மற்றும் கிட்னி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடராஜனை காண 5 நாட்கள் பரோலில் சசிகலா சென்னைக்கு வந்திருக்கிறார்.
5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா இதுவரை 5 மணி நேரம்கூட கணவன் நடராஜனுடன் செலவிட வில்லை என்றும், உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனேயே ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலாவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தொடர்பு கொண்டு பேசியதாக டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செல்வன் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வந்த தகவல் தவறு; அவரை தொடர்புகொள்ளும் எண்ணம் யாருக்கும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், குட்கா விவகாரத்தில் முகாந்திரம் உள்ள 17 பேர் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், தமிழக அரசோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால், டெங்கு இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்றும் கூறினார்.