மதுரை,

துரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் தொன்மையான சைவ சமய பீடங்களில் ஒன்றாக விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் தலைமை பீடாதிபதியாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் செயல்பட்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் சிக்கிய   நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நியமனம் செய்வதாக மதுரை ஆதினம் அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவரை நீக்கியும் ஆதீனம் அறிவித்தார்.

இதையடுத்து மதுரை ஆதின மடத்தை கைப்பற்ற நித்தியானந்தா முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  மதுரை ஆதீன மடத்துக்கள் நித்யானந்தா நுழைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கக்கோரியும்  ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில்,  நித்யானந்தா மடத்திற்குள் நுழைந்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும், எனவே, மடத்திற்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மதுரை ஆதீன மடத்திற்குள்  நித்தியானந்தா செல்ல இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும்,   மடத்தின் நிர்வாகத்தில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள்  யாரும் தலையிடக்கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இதுதொடர்பாக நித்யானந்தா,  தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்து அறநிலை யத்துறை மற்றும் மதுரை கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.