இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் எம்.கியூ.எம். விலகியதை அடுத்து ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைந்தது. அத்துடன், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தாலும் அவர் தோல்வி அடைவது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் விலை போய் விட்டால், இம்ரான்கான் அரசு பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

இன்று நடைபெறும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பில், இம்ரான்கான் தோல்வி அடைவாரா? அல்லது வெற்றி பெறுவாரா? என்று தெரியவரும்.

இருப்பினும், இந்த வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால், இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.