டெல்லி:

7 விமானநிலையங்களில் பயணிகள் கை லக்கேஜ்களுக்கு முத்திரை மற்றும் சீல் வைப்பது நாளை முதல் நிறுத்தப்படுகிறது.

இந்திய விமானநிலையங்களில் பயணிகள் விமான பயணத்தின் போது கையில் வைத்திருக்கும் பை, சூட்கேஸ், ஹேண்ட் பேக் உள்ளிட்ட லக்கேஜ்களுக்கு முத்திரையிட்டு, அதற்கு சீல் வைக்கும் பணியை மத்திய தொழிற் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) மேற்கொண்டு வருகிறது. இந்த நடைமுறையை கைவிட சிஐஎஸ்எப் முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, கொச்சின், அகமதாபாத் ஆகிய 7 பெரு விமானநிலையங்களில் இந்த பணியை நாளை (ஏப்ரல் 1) முதல் கைவிடுவதாக சிஐஎஸ்எல் தலைவர் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ கை லக்கேஜ்களை ஸ்கேன் செய்ய பாதுகாப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சுதந்திரமான பாதுகாப்பு சூழலை உருவாக்கி தரப்படுகிறது. இந்த புதிய கருவிகளை இயக்க சிஐஎஸ்எப் வீரர்கள் தயாராகிவிட்டனர். இதை பெங்களூரு விமானநிலையத்தில் நேரடியாக ஆய்வு செய்து அறிந்தேன்’’ என்றார்.

முன்னதாக இந்த முடிவை விமான போக்குவரத்து துறை பாதுகாப்பு அறிவித்தது. ஆனால், போதுமான பாதுகாப்பு கருவிகளை நிறுவிய பிறகே இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சிஐஎஸ்எப் எதிர்ப்பு தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.