“சசிகலாவுடன் நடராஜனுக்கு தொடர்பே இல்லை! அவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்!” : டி.டி.வி. தினகரன்

“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் “சசிகலாவுடன் அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த 26 ஆண்டு களாக தொடர்பே இல்லை. அவர் சொல்வதை அ.தி.மு.க.வில் யாரும் கேட்க மாட்டார்கள்!” என்று அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தினகரன் தெரிவித்ததாவது:

“எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா அதிமுக தலைமை பொறுப்பை ஏற்ற நாள் முதல் நாங்கள் அவருக்கு பக்கபலமாக பாதுகாப்பாக இருந்து வந்தோம்.  நாங்கள் இல்லையென்றால் ஜெயலலிதாவை பெங்களூருவுக்கோ வேறு மாநிலத்துக்கோ விரட்டியிருப்பார்கள். நானும்,  ஜெயலலிதாவுக்கு  பக்கபலமாக இருந்தேன். இது தி.மு.க.வின் கண்ணை உறுத்தியிருக்கிறது. ஆகவே ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு எதிரான கருத்துக்களை தி.மு.கவினர் தெரிவித்து வருகிறார்கள்.

1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எங்களுடைய குடும்ப உறுப்பி னர்கள் பல்வேறு சூழ்நிலையில் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகள் செய்திருக்கக்கூடும். அதற்காக ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

நான் 1986 முதல் 2010ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுடன்தான் இருந்தேன். எம்பியாக ஜெயலலிதா பேரவைச் செயலாளராக அமைப்புச் செயலாளராக கட்சியின் பொருளாளராக நான் பொறுப்பு வகித்திருக்கிறேன். 2011ம் ஆண்டுதான் என்னை ஜெயலலிதா சில காலம் ஒதுக்கி வைத்திருந்தார். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று முறை ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறேன். தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேசியிருக்கிறோம்.  அவர் உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் இருந்த போது என்னிடம் பேசிய சசிகலா, அக்கா உடல் நிலை தேறி வந்ததும் மீண்டும் உன்னை அரசியலுக்கு கொண்டு வந்து பொறுப்புக்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார்.

துரதிருஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்து விட்டதால் கட்சியின் தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலரும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பொதுச்செய லாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் கட்சி நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக என்னை துணைப் பொதுச் செயலாளராக நியமித்து இருக்கிறார். அவருடைய பணிகளை நான் செய்து வருகிறேன்.

ஜெயலலிதா மறைந்த போது அவர் அருகில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்து நின்றது குறித்து நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்ப வில்லை. எல்லோரும் அப்போது துக்கத்தில் இருந்தோம்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகே கட்சியும் ஆட்சியும் சசிகலா தலைமையில் செயல்படவேண்டும் என்று ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கூறினர்.

ஆனால் பதவி ஆசை காரணமாக திமுகவுடன் சேர்ந்து ஓபிஎஸ், கட்சிக்கு எதிரான நிலையை எடுத்து சில பொய்யான  குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். கடைசியாக அவர் முதல்வர் பொறுப்பு வகித்த இரண்டு மாதங்களில் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அமைச்சர்கள், எம்எல்ஏக் களை மதிக்காமலும் செயல்பட்டு வந்ததார். ஆகவே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ்சை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது குறித்து  முடிவெடுத்த போது ஓபிஎஸ்சே சசிகலாவை முன் மொழிந்து எழுதிக் கொடுத்தார். ஆனால்  இரண்டு நாட்கள் கழித்து திடீரென தியான நாடகத்தை நடத்தினார்.

அவரை யாரும் மிரட்டி கையெழுத்து வாங்க வில்லை. சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.

ஓபிஎஸ் அணியினர், அ.தி.மு.க. எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறி இழுக்க முயற்சித்தனர். அதனால்தான் எங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் தங்கினார்கள். அதில் எந்த தவறும் கிடையாது.

எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நடராஜன், திவாகரன், மகாதேவன் உள்ளிட்ட வேறு எவரையும் கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. குடும்ப ஆட்சி நடத்துவோம் என்ற நடராஜன் கூறியது வரது சொந்த கருத்து. அதை யாரும் ஏற்க மாட்டார்கள். 1990ம் ஆண்டுக்குப்பிறகு நடராஜன் போயஸ் கார்டனுக்கு வருவதே இல்லை. சசிகலாவுக்கும் அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. ஆகவே அவருடைய கருத்தை சசிகலாவோ கட்சியினரோ ஏற்க மாட்டார்கள்.

அதே போல திவாகரன் கருத்தையும் யாரும் ஏற்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித மர்மமும் கிடையாது. சிறந்த மருத்துவர்கள்  கண்காணிப்பில்  அவருக்கு உயரிய  சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

எங்களிடம் இருந்து. சென்றவர்களே இப்போது குற்றச்சாட்டுகளை வீசுவதால்தான் மருத்துவ அறிக்கை விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் நீதி விசாரணை கேட்கிறார்கள். நாங்கள் நீதி விசாரணை நடத்தினால், ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தவறாக சொல்வதாக கூறுவார்கள்.

ஆகவே மத்திய அரசு நீதி விசாரணை நடத்தட்டும். எந்த விசாரணையையும் நாங்கள் சந்திக்க தயார். இந்த விசாரணையில் ஏ 1 குற்றவாளியாக ஓபிஎஸ் தரப்பினர்தான் இருக்கப் போகிறார்கள்.

நாங்கள் எம்எல்ஏக்களுக்கு தங்கம், பணம் கொடுத்ததாக சொல்வதெல்லாம் பொய். அவர்கள் தரப்பில் இருந்துதான் பண ஆசை பதவி ஆசை காட்டி இழுக்க முயற்சித்தார்கள்.

ஆர்கே நகர் தேர்தலில் எங்கள் அணி வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார். எதிர் வரும் உள்ளாட்சி தேர்தல் அதற்கு அடுத்து வரும் லோக்சபா. சட்டசபை தேர்தல் அனைத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று தினகரன் தெரிவித்தார்.


English Summary
"No relationship between Natarajan and Sasikala! Natarajan says, No one will not listen TTV.Thinakaran