லஞ்சம் கொடுத்தாலும்கூட முறையான சேவை கிடைக்காத அரசு கண் மருத்துவமனை!

Must read

சென்னை: தமிழக தலைநகரின் எழும்பூரிலுள்ள அரசு கண் மருத்துவமனையில், லஞ்சம் கொடுத்தாலும்கூட பொதுமக்களுக்கான சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என்று கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக, அரசு சார்ந்த அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் எந்த காரியமும் எளிதில் முடிந்துவிடும் என்பதே அனைவருக்குமான அனுபவம். ஆனால், எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நிலைமை இன்னும் மோசம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பார்வையற்றோருக்கான சான்றிதழுக்காக ரூ.100 வரையிலான கட்டணம் செலுத்திய அன்றைய தினமே, சான்றிதழை வழங்கிவிட வேண்டுமென்பது விதிமுறை. ஆனால், நிஜத்தில் நடப்பதோ வேறாக இருக்கிறது. ரூ.200 கொடுத்தால்கூட பலமுறை அலைந்தே சான்றிதழைப் பெற வேண்டியுள்ளது. பணம் செலுத்தியதற்கு எந்தவித ரசீதும் தருவதில்லை.

41 வயதாக லீலா தேவி என்ற பெண்மணி, ரூ.200 லஞ்சம் கொடுத்தும், தனக்கான மாற்றுத் திறனாளி சான்றிதழைப் பெறுவதற்காக இதுவரை 10 முறை மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அவர் மொத்தம் 50 மணிநேரங்கள் அங்கேயே செலவிட்டுள்ளார்.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், லீலா தேவியுடன் உடன் வரவேண்டியிருப்பதற்காக, ஒரு தொழிற்சாலையில் வேலைபார்க்கும் அவரின் கணவர் அடிக்கடி விடுமுறை எடுத்த காரணத்தால், தனது வேலையையே இழந்துவிட்டார்.

மேலும், புதுச்சேரியிலிருந்து தனக்கான மாற்றுத்திறனாளி சான்றிதழைப் பெறுவதற்காக வந்த பாண்டிச் செல்வன் என்பவர், சென்னையிலேயே தங்கியுள்ளார். அவர், தன்னால் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியவில்லை என்றும் வருந்தியுள்ளார்.

More articles

Latest article