காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் அதிகம் வருவதால், பெருமாள் மூலவர் மற்றும் தாயார் சன்னிதிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை உடனடியாக திறக்க கோரி போராட்டம் நடைபெற்றது. இதனால், கோவில் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ள குளத்தில் இருந்து கடந்த 1ம் தேதி அத்திவரதர் எடுக்கப்பட்டார். 48 நாட்கள் வெளியில் வைத்து அத்திவரதர் பூஜிக்கப்படும் நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று, அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்த நிலையில், இன்றும் காலை முதல் லட்சக்கணக்கானோர் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் காத்திருக்கவேண்டிய சூழல் இருப்பதால், அத்திவரதரை மக்கள் தரிசித்த பிறகே கோவில் மூடப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் சமீபத்தில் கோவிலின் மூலவர் மற்றும் தாயார் சன்னதிகள் அடைக்கப்படும் என்றும், அத்திவரதர் வைபவம் முடிந்த பின்னர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், அந்த முடிவு தற்காலிகமாக கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில், இன்று திடீரென பெருமாள் மூலவர் மற்றும் தாயார் சன்னதிகள் அறிவிப்பின்றி அடைக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் பலரும் மேற்கு கோபுரம் வாயில் முன்பு அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டம் நீடித்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தால், கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.