புதுடெல்லி: கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில், தனது காலில் பாகிஸ்தான் வீரர்கள் சுட்ட 6 குண்டுகளைத் தாங்கி தீரத்துடன் போரிட்ட ராஜ்புத்னா ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த சத்பீர் சிங் என்ற வீரர், முறையான இழப்பீடின்றி குடும்பத்தைக் காப்பாற்ற போராடி வருகிறார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போது 53 வயதாகும் சத்பீர் சிங், 1999 கார்கில் போரின்போது, டோலோலிங் மலைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்களை எதிர்த்து சண்டையிடும்போது, தனது காலில் 6 குண்டுகளைத் தாங்கினார். அதில் 5 குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுவிட, 1 குண்டு இன்னும் காலிலேயே இருக்கிறது.

இவருக்கு 1 ஏக்கர் நிலம் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும், மாதம் ரூ.40,332 ஓய்வூதியமாக வழங்குவதாகவும் ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவருக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.23,000 மட்டுமே.

குழந்தைகளின் கல்வி செலவு ஏற்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து, சரியான ஆவணங்களை சமர்ப்பித்தும் இவருக்கான நியாயமான இழப்பீடு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் இவரை முறையாக வேளாண்மையும் செய்ய விடவில்லை.

இவர், செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொள்ளவில்லை. கைத்தடியின் உதவியுடனேயே நடக்கிறார். இவர் மொத்தம் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றியுள்ளார். அதில் 8.5 ஆண்டுகள் காஷ்மீரில் மட்டுமே பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது ஒரு ஜுஸ் கடை நடத்திவருகிறார். ஆனால், அந்த இடம் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக இருப்பதால், போதிய வருமானமும் கிடைப்பதில்லை.

இவர், தனக்கான நியாயம் கிடைக்க தொடர்ந்து போராடி வருகிறார். இவருக்கு கிடைத்ததை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கும்படி மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும், தன் நிலை பிற்காலத்தில் வேறு எந்த வீரருக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து போராடுவேன் என்கிறார் இந்த தைரியமான வீரர்!