ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநருக்கு பெட்ரோல் விற்பனை இல்லை : பெங்களூருவில் புதிய விதி

Must read

பெங்களூரு

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் விற்பனை கிடையாது என்னும் விதி வரும் 5 ஆம் தேதி முதல் பெங்களூரில் அமலாகிறது.

பெங்களூரு நகரில் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.  கடந்த 2018 ஆம் வருடம் இருசக்கர வாகன விபத்தில் 150 ஓட்டுனர்கள் மரணம் அடைந்துள்ளனர்.  இது அதற்கு முந்தைய ஆண்டை விட எண்ணிக்கையில் 10 அதிகமாகும்.  இந்த வருடம் கடந்த மாதம் வரை 105 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் இதே விகிதத்தில் அதிகரித்துள்ளது.

ஐநா சபை எடுத்த கணக்கெடுப்பின்படி ஹெல்மெட் அணிந்ததால் விபத்தில் மரணமடைவதில் இருந்து சுமார் 42% பேர் தப்பி உள்ளனர்.  இதை போல் காயமடைவதில் இருந்து 69% பேர் தப்பி உள்ளனர்.  எனவே இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்களை அவசியம் ஹெல்மெட் அணிய வைக்க வேண்டியதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

அதையொட்டி பெங்களூரு காவல்துறை ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம்  ஓட்டுவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்னும் தடை உத்தரவை வரும் 5 ஆம் தேதி முதல் அமல்படுத்த எண்ணியுள்ளது.

இது குறித்து துணை ஆய்வாளர் ஜகதீஷ், “நாங்கள் ஏற்கனவே கடந்த சனிக்கிழமை  அன்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினோம்.  அந்த கூட்டத்தில் வரும் 5ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது எனக் கோரிக்கை விடப்பட்டது.  அதை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்” எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article