’வட கொரிய அதிபருக்கு எந்த ஆபரேஷனும் நடக்கவில்லை’’

அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் –குறித்து அவ்வப்போது புரளிகள் கிளம்பும்.

கடந்த 40 நாட்களாக கிம் ஜோங், வெளி உலகில் தலை காட்டாததால் அயல் நாட்டு ஊடகங்கள் அவர் பற்றி நிறையக் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன.

‘’ஓவராக சிகரெட் குடித்துக் குடித்து கிம் ஜோங் , இருதயம் கெட்டு விட்டது. இதனால் அவருக்கு இதய ஆபரேஷன் செய்யப்பட்டு, கவலைக்கிடமாக இருக்கிறார்’’ என்று முதலில் செய்தி பரப்பப்பட்டது.

இதனை வட கொரியா மறுக்கவில்லை.

இதனால், அடுத்த கட்டமாக ’’கிம் ஜோங் இறந்து விட்டார். அடுத்த வாரிசு யார் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று மற்றொரு செய்தி வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அங்கு நடந்த உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் பங்கேற்று, மேடையில் ஜாலியாக நடைபோட்டு, ஊர் வாயை மூட வைத்தார்.

‘’ கிம் ஜோங் உன்னுக்கு இருதய ஆபரேஷன் நடந்ததாக வெளியான செய்தி பொய்’’ என்று தென் கொரிய அதிகாரிகள் இப்போது  தெரிவித்துள்ளனர்.

ஒருபடி மேலே போய்,’’ கிம் ஜோங் உன்னுக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை.’’ என்றும் தென் கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

– ஏழுமலை வெங்கடேசன்