டெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுவதையடுத்து, வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகளைத் திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. இங்கு இதுவரை 97,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,203 பேர் உயிரிழந்துள்ளனர். 78,422 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனால், அந்நாடு மரண எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில், ஈரானில் கொரோனாவின் பரவல் சில நாட்களாக குறைந்து வருகிறது. முதலில் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு நாள் பாதிப்பு ஆயிரத்திற்குள் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்நாட்டில் 976 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை பொறுத்து ஈரானின் பகுதிகள் வெள்ளை, மஞ்சள், மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அந்நாட்டு அதிபர் ஹஸான் ரவுகானி கூறுகையில், “கொரோனா அதிகம் பாதிக்காத 132 வெள்ளை மண்டலங்களில் மசூதிகள் மற்றும் பள்ளிகளை மே மாதம் 16ம் தேதிக்குப் பிறகு திறக்கும் திட்டமுள்ளது. இருப்பினும் கொரோனா பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்றார்.