பகுதி 2:

உங்க மீதான அந்த பழைய “கவர்ச்சி” இமேஜ் மாறிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?

இல்லவே இல்லை. அந்த இமேஜ் மாறவில்லை. மாறக்கூடாது. எதுக்காக மாறணும்? என்னோட அந்த இமேஜ்தான் எனக்கு சாப்பாடு போடுது. அது அப்படியே இருக்கட்டும்.

ஆனா சினிமாவில் அந்த இமேஜ் பிரச்சனைக்குரியது.  மலையாள சினிமாவில் ஒரு டைரக்டர் கூட ஷகீலாவுக்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கொடுக்கணும்னு நினைச்சது கிடையாது.

எனக்கு நல்லாதெரியும் அம்மா வேஷத்துல நடிக்கிற சில நடிகைகளை. அவங்க சினிமாவுக்கு அப்புறம் நடத்துற காரியங்களையும் நன்கு அறிவேன்.

அவங்களை சினிமாவில் பார்க்கும் போது எனக்குத்தோன்றும்,”எனக்கும் இப்படி ஒரு அம்மா இருந்திருந்திருந்தாங்கன்னா..!” அதுதான் இமேஜ். யூ காண்ட் சேஞ்ச் இட்.

ஆனா இங்கே எனக்கு காமடி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்குது.  ஒரு சினிமாவுல காமடி பேசும் அம்மா கேரக்டரில் நடிச்சேன். இனியும் நல்ல சினிமா வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்.  எனக்கு இப்போ 39 வயசுதான் ஆகுது. இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்.

“செக்ஸ் பாம்”னு ஒரு இமேஜ் வந்துடிச்சேன்னு இப்போ நீங்க வருத்தப்படுறீங்களா?

என்ன சொல்றது?  என்னோட சகோதரன் சலீமின் மனைவியின் குடும்பத்தினரை எனக்கு  யாருன்னே எனக்குத்தெரியாது. அவன் அவங்களை என்கிட்டே அறிமுகப்படுத்தினதுகூட கிடையாது.

பிரண்ட்ஸ்ங்க என்னை வீட்டுக்கு கூப்பிடுவாங்க.”நான் கூப்பிட்டா ஷகீலா வருவான்னு தம்பட்டம் அடிச்சுக்கிறதுக்காக” ஆனா வீட்டுல ஒரு பார்ட்டி நடந்துச்சுன்னா என்னை கூப்பிட மாட்டாங்க. பார்ட்டிக்கு வந்தவங்க என்னை பார்த்த அவங்களை தப்பா நினைப்பாங்கன்னு அவங்க நினைச்சு என்னை தவிர்த்திடுவாங்க.

இருந்தாலும் அவங்கதான் என்னோட பிரண்ட்ஸ்.. நான் சாதாரண பெண் தானே. எனக்கு யார்கிட்டேயாவது பேசணும்னு தோணும்தான்.அதனால இதையெல்லாம் கண்டுக்க மாட்டேன்.

என்னை கூடப்பிறந்த சகோதரிபோல நினைக்கிறவங்களும் இருக்காங்க. ஆனா, என் கூட நிற்கும் போது அவங்களுக்கு போன் வந்துச்சின்னா போனோட வாயைப்பொத்தி என்கிட்டே,”வைஃப் .. வைப்”ன்னு சொல்லுவாங்க.. அப்போஎனக்கு இதயம் நொறுங்கினது போலாகும்.  என்னை ஈஸியா வருத்தப்பட வைச்சிடலாம். அதற்கு ஒரே ஒரு வார்த்தை போதும்.

அன்பு செலுத்துறதுக்கு நம்பிக்கையான  யாருமே உங்களுக்கு இல்லையா?

ஒருத்தனும் இல்லை…அப்படி யாரும் இல்லை.

அதனாலதான் கல்யாணம் வேண்டாம்னு முடிவு செய்தீங்களா?

யாரு வேண்டாம்னு சொன்னாங்க? எனக்கும் ஒரு குடும்பம் வேணும். குழந்தை குட்டிங்களோட சந்தோஷமா இருக்கணும்னு ஆசை உண்டு.  ஆனா என்னை யாரு கல்யாணம் பண்ணிப் பாங்க.? நோ படி. நான் பலரை காதலிச் சிருக்கேன். கல்யாணம் பத்தி பேச்செடுத் தால்,”அம்மா சம்மதிக்க மாட்டாங்க”ன்னு சொல்லி நழுவிடுவாங்க…அப்படி சொல்லுறதைக்கேக்குறப்ப எனக்கு கோபம் வரும். நான்,”போடா”ன்னு விரட்டிடுவேன்.  இப்படிதான் எனக்கு கல்யாண வாழ்க்கைன்னு ஒண்ணு அமையாமப்போச்சு.

நான் இப்பவும் ஒருத்தரை காதலிச்சுட்டிருக்கேன். அவரும் கல்யாணம் பண்ணிக்க ரெடி. ஆனா அவரோட அப்பா இதற்கு பயங்கர எதிர்ப்பு.

வாழ்க்கையில் தனித்து விடப்பட்டதுமாதிரி உணர்றீங்களா?

சிலவேளைகளில் அப்படித்தோன்றுவது உண்டு. 35 வருஷமா நான் இதே பிளாட்டில் தங்கியிருக்கேன். அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் என 15 பேர் இங்கே ஒரு காலத்துல தங்கியிருந்திருக்கேன். இப்போ இங்கே நான் மட்டுமே. அக்காவும் தம்பியும் தனியா போயிட்டாங்க. மத்தவங்க செத்துபோயிட்டாங்க.  தனியா இருக்க வேண்டாம்னுதான் இப்போ தங்கம்கிற பையனை தத்து எடுத்திருக்கிறேன். இப்போ இவன் எனக்கு துணையா இருக்கான். இருந்தாலும் சில வேளை தோன்றும்.. என்ன வாழ்க்கை இது… குடும்பம் இல்லை. குட்டிங்க இல்லை..ம்ஹூம்…

நடுவில் ரொம்ப இளைத்துப்போயிருந்தீர்களா?

ஆமா.. மனம் போன போக்குல சாப்பிட்டுத்தான் இப்படி குண்டா ஆனேன். நாக்குக்கு புடிச்சிருந்தா என்ன வேணும்னாலும் சாப்பிடுவேன். கூடவே மதுப்பழக்கமும்.. உண்டு. கேட்கவா வேணும்?

பட்… மது பாட்டிலைத்தொடுறதை நிறுத்தி ரெண்டு வருஷமாச்சு. டாக்டர் சொன்னதினாலேயோ.. வேற ஏதாச்சும் பிரச்சனை வரும்னு சொல்லியோ இல்லை.. குடிக்கிறதுல ஒரு சுகமும் இல்லைன்னு தோணிச்சு.. மட்டுமில்லாம குடிச்சா சிலவேளைகளில் வாந்தி வரத்தொடங்கிச்சு.. அப்புறம் மறுநாள் காலையில எழும்பும்போது பயங்கர தலைவலி வரும். அதனால குடிக்கு குட்பை சொன்னேன்

ஷூட்டிங் இடைவேளையின்போது தண்ணி போடுவீங்கன்னு ஒரு பேச்சு உலவுதே…?

இல்லவே இல்லை. நான் அப்படி தண்ணி அடிச்சதே இல்லை. மேக்கப் போட்டேன்னா தண்ணி போடவே மாட்டேன். ஷூட்டிங் முடிஞ்சு மேக்கப் கலைத்த பின்னாடிதான் தண்ணி போடுவேன். அது நள்ளிரவைத்தாண்டியிருந்தாலும் கூட அப்படித்தான்.

இனி உடம்பை இளைக்க வைக்கணும்னு ஆசை உண்டா?

எதுக்கு இளைக்க வைக்கணும் ? இடையில் நான் கொஞ்சம் ஸ்லிம் ஆனேன். பயங்கரமா டயட் இருந்தேன். ஒரு தடவை ஒரு நிகழ்ச்சிக்கு போனப்ப என்னை யாருமே கண்டுக்கலை. அவங்களுக்கும் என்னை யாருன்னே தெரியலை.”அய்யோ உடம்புக்கு என்னாச்சு.. ? சர்க்கரை வியாதி வந்துச்சா?” ன்னு துக்கம் விசாரிக்கத்துவங்கினாங்க. எல்லோருக்கும் பதில் சொல்லி தாளலை.

அப்புறம் முடிவு செய்தேன் பழைய ஷகீலாவா மாறிடுவோம்னு. டயட்டை கைவிட்டேன். எப்பவும்போல சாப்பிட்டேன். ஷகீலான்னா பருமன்னு எல்லோரும் அங்கீகரம் தந்திருக்கிறப்ப அப்படியே இருப்போம்னு தோணிச்சு இப்போ நான் பழைய அதே ஷகீலா.

பேட்டி: க்ருஷ்ணவேணி தினேஷ்

( நிறைவு பகுதி நாளை)