டெல்லி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் வழங்க ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இதனால் , நகர்புற உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தது. அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, முறையாக இட ஒதுக்கீடு செய்யப்பட வில்லையென தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது இழுத்தடிக்கப்பட்டு வந்தது.  இதுதொடர்பான வழக்கினை விசாரித்த நீதிமன்றம்,   சரியான முறையில் இட ஒதுக்கீடு செய்த பிறகு, தேர்தலை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்தது. இருந்தாலும் தேர்தல் அறிவிக்கப்படாத தால், அப்போதைய அதிமுக அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டது. அந்த  வழக்கில் 2020 டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பாக தேர்தலை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் 2020ம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென அறிவித்தது.

ஆனால், இதற்கும் தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதி களுக்கும் சேர்த்து தேர்தலை அறிவிக்க வேண்டுமென கூறினர். இதுதொடர்பாக அன்றைய தினமே திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டது. அதில்,  தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், 9 மாவட்டங்களின் எல்லைகள் மாறியிருக்கின்றன. அந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். மேலும், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தாமல் மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட  ஒன்பது மாவட்டங்களைத் தவிர பிற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதையடுத்து 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றை காரணம் காட்டி 9 மாவட்டம் உள்பட நகர்புற தேர்தல்களையும் நடத்தால், கடந்த அதிமுக அரசு இழுத்தடித்து வந்தது. இது தொடர்பாகவும் திமுக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும், அதற்கு 7மாதம் அவகாசம் தேவை என  கோரப்பட்டது.  இந்த வழக்கில், ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக அவகாசம் கோரப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்ததோடு,   ”நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்தும்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?” என்று தமிழக அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 7 மாத கால அவகாசம் அளிக்க இயலாது என்றும், இதுகுறித்து 2 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (இந்த வழக்கில் மனுதாரர் திமுக. தற்போது திமுக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது ) அதில்,  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த திமுகவே தற்போது, உள்ளாட்சி தேர்தலுக்கு அவகாசம் கோரியுள்ளது.