புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10ஆண்டுகளுக்கு பிறகு  உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்னணு இயந்திரம் மூலம்  3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டைபோல புதுச்சேரியிலும் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து  உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கூட இதை விமர்சித்திருந்தார்.

புதுச்சேரியில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. அதன்படி, புதுச்சேரியில்  மொத்தம்  5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆகிய பணிகளை முடித்து, தேர்தலை நடத்த தயாராக இருந்தது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் பரவின.

இந்த நிலையில், இன்று மதியம்  செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவித்து உள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள  1,149 பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

அக்டோபர் 21, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கும்,
3ம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெடட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்
அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

மேலும் இதுவரையில்லாமல் முதன்முறையாக புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையர் கூறினார்.