சென்னை

ம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக நிதி அளித்தது குறித்து பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவை இல்லை என முக ஸ்டாலின் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான செலவு குறித்து திமுக தேர்தல் ஆணையத்துக்குக் கணக்கு அறிக்கை அளித்திருந்தது.   அந்த அறிக்கையில் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக தலா ரூ.15 கோடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியும் நிதி அளித்துள்ளது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   தேமுதிக தலைவர்களில் ஒருவரான பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு இக்கட்சிகளுக்கு திமுக நிதி அளித்தது ஏன் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேள்விகள் எழுப்பினார்.  இது திமுக வட்டாரத்தில் கடும் கோபத்தை உண்டாக்கியது.

திமுக தலைவர் மு க ஸ்டாலின், “நாங்கள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அளித்துள்ளோம்.  வருமான வரிக் கணக்கிலும் இந்த நிதி அளித்ததைக் காட்டி உள்ளோம்.  எனவே பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட யாருக்கும் நாங்கள் விளக்கம் அளிக்கத் தேவை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.