அரியலூர்:

னி உங்கள் மீது அனுதாபம் வராது ராமதாஸ்  என்று, திமுக மீது குற்றம் சாட்டிய ராமதாஸ் மீது அரியலூர் மாவட்ட திமுக செயலாளர்   சிவசங்கர் கடுமையாக சாடியுள்ளார்.

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவுக்கு பா.ம.க. மற்றும் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் குருவின் சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் (செப்டம்பர் 18ந்தேதி)  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக தலைவர் ராமதாஸ்  மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது,  கடந்த 13.12.18 அன்று காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினேன். தற்போது ரூ.2½ கோடி செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. குருவை நான் மூத்த பிள்ளையாகத்தான் பார்க்கிறேன். குரு இறந்தது எனக்கு கொடுத்த முதல் தண்டனை. மணிமண்டப திறப்பு விழாவில் நான் கலந்துகொண்டதை இரண்டாவது தண்டனையாகத் தான் பார்க்கிறேன் என்று பேசியவர்,  குருவை திமுக கொலை செய்ய முயற்சித்தது என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதில்  தெரிவித்து, அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘டாக்டர் ராமதாஸ் ஓர் கைதேர்ந்த அரசியல்வாதி என, பல காலம் பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர். காரணம், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி “அறுவடை” செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். அவர் சேரும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சொல்லும் அளவிற்கு ‘கணக்கு’ போட்டு கூட்டணி அமைப்பார். ஆனால் அது ஓர் காலம். கடந்த சில தேர்தல்களாக அவர் அமைக்கும் கூட்டணி தான் ‘தோல்வி கூட்டணி’ ஆக அமைகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்தும் ‘தோல்விக் கூட்டணியில்’ சேர்ந்தார். இதற்கு காரணமும் ‘அறுவடை’ தான் என பத்திரிக்கைகள், ஊடகங்கள் பேசின. பாட்டாளி மக்கள் கட்சி தோற்றது அவர் எதிர்பார்த்தது தான். மத்தியில் கூட்டணி அரசு அமைந்திருக்கிற சூழலில், தன் மகன் அன்புமணி வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் ஆகியிருக்கலாம், இப்போது அது நடக்காமல் போய்விட்டதே என்ற விரக்தியில் உள்ளார்.

விரக்தி மேலிடுகிற போது எந்தக் கட்சி மேலாவது பாய்ந்து, குற்றம் சொல்லி தன் ‘காய்ச்சலை’ தீர்த்துக் கொள்வது வழக்கம். அது போல சந்தர்ப்பத்திற்காக சில மாதங்களாக காத்திருந்தார் ராமதாஸ். நேற்று (17.09.2019) தான் அந்த சந்தர்ப்பம் வாய்த்தது அவருக்கு. மறைந்த சட்டமன்ற உறுப்பினர் குரு அவர்களின் நினைவு மண்டபம் திறப்பு விழா அந்த வாய்ப்பாக அமைந்தது. வழக்கமாக தான் பேச நினைப்பதை, குருவை பேச வைத்து குளிர் காய்வது ராமதாஸின் வாடிக்கை.

இப்போது குரு இல்லாத சூழலில், குரு பெயரை பயன்படுத்தி பா.ம.கவை உயிர்பிக்க நினைக்கிறார். குரு நினைவு மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசும் போது, “இங்கே, இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், அன்புமணி அவர்களும் கோடிட்டுக் காட்டினார்கள். குருவினுடைய வாழும் காலத்திலே அவரை இங்கே வளராமல் செய்வதற்கு, அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அப்பொழுது ஆண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெரியவர்கள். அவரை கொல்வதற்கு பல்வேறு சதி திட்டங்களை தீட்டினார்கள். அது வைத்திக்கு தெரியும்.

அப்படி அந்த திட்டங்களை நிறைவேறாமல் செய்தவர்கள் நானும், ஜி.கே.மணி அவர்களும். அது தெரிந்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்திற்கு உடனடியாக அவரை போக சொல்லி அந்த திட்டம் நிறைவேறாமல் செய்வதற்கு. இல்லை என்றால் குருவை எப்போதோ நாம் இழந்திருப்போம். குருவை கொள்வதற்கு சதி செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் என்று பேசியிருக்கிறார்.

நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

1. தி.மு.க ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன ?

2. ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே ?

3. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் தி.மு.க உடன் கூட்டணி வைத்தீர்கள் ?

4. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி தி.மு.க கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார் ?

2011 ஆம் ஆண்டு தி.மு.க – பா.ம.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நேரத்தில் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.கவுக்கு என தி.மு.க பேச்சுவார்த்தை குழு சொல்லி விட்டது. பா.ம.க குழு ஜெயங்கொண்டம் தொகுதி குருவுக்கு வேண்டும் என கேட்டது. ஒரு நாள் பேச்சுவார்த்தை நின்று போனது. பிறகு அன்று கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனிடம் அன்புமணி பேசி, அவர் கழகத் தலைவர் தளபதி அவர்களிடம் பேசி ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.கவுக்கு வழங்கப்பட்டது. மறைந்த குரு அவர்கள் அறிவாலயம் சென்று தலைவர் கலைஞரிடத்திலே வாழ்த்து பெற்றார். தலைவர் கலைஞர் அவர்கள், அப்போது குரு அவர்களை தட்டிக் கொடுத்து “ஜெயங்கொண்டத்திலே ஜெயம் கொள்வாய்”, என வாழ்த்தியதை குரு எல்லோரிடத்திலும் பகிர்ந்து கொண்டார். குருவும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த குருவை தி.மு.க கொலை செய்ய பார்த்தது என சொல்வது எவ்வளவு பெரிய பாதகம்?

ராமதாஸ் ஏன் இப்படி பிதற்ற வேண்டும், காரணம் இருக்கிறது.

குரு அவர்கள் மறைவிற்கு பிறகு, பா.ம.கவின் சரிவு துவங்கி விட்டது. குரு உடல்நலம் குன்றி இருந்த நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியோ உதவவில்லை என்ற குற்றச்சாட்டு வன்னியர் சங்கத்தினராலேயே சொல்லப்பட்டது. அப்போது உதவி இருந்தால், சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குரு நீண்ட காலம் வாழ்ந்திருப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அதை குரு அவர்களின் சகோதரியும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலுக்கு பிறகு குரு அவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த மன வருத்தத்திற்கிடையே குரு சிகிச்சை கூட எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது.

கடைசி நாட்களில் மருத்துவ உதவி செய்தார் ராமதாஸ். ஆனால் அதை வன்னியர் சங்க இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான் குரு மறைவுற்ற அன்று அன்புமணிக்கு காடுவெட்டி கிராமத்திலும் காட்டப்பட்ட எதிர்ப்பு.

அடுத்து குரு மறைவிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் குருவை புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்து விட்டார்.

முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்க விடாமல் தடுத்தார். குரு நினைவிடத்திற்கு குருவின் மகன், மகளையே செல்ல விடாமல் தடுத்தார். வேறு இடத்தில் இப்போது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

இதை எல்லாம் திசை திருப்பத் தான் இப்போது ‘குருவை கொல்ல முயற்சி’ என ஒரு அபாண்ட மான குற்றச்சாட்டை சொல்கிறார். அதிலும் குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தக்க வைக்க தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு.

காடுவெட்டி குரு அவர்களை பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களுக்கு போலீஸ் வேனில் அலைக்கழித்து, அவர் உடல்நலம் முழுவதும் குன்றி, நோய் வாய்ப்படுவதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்று ராமதாஸே குற்றம் சுமத்திய காலம் உண்டு. அது தான் உண்மையும்.

காடுவெட்டி குருவுக்கு அதிமுக ஆட்சியில் நடந்த அராஜகங்களை மறந்துவிட்டு ‘தேர்தல் கால அறுவடைக்காக’ அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியின் முதலமைச்சர், அமைச்சர்களை எல்லாம் தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து தடபுடலாக அறுசுவை விருந்தளித்த ராமதாஸ் அவர்கள் திமுக மீது பாய்வதற்கு தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்னொரு காரணம் .

திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியப் பெரு மக்களுக்காக ஆற்றிய தொண்டினை நினைவு கூர்ந்து அச்சமுதாய மக்கள் பெருவாரியாக திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள், கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையிலான கூட்டணிக்கு 39 நாடாளுமன்றத் தொகுதிகளை வழங்கி விட்டார்கள் என்ற எரிச்சலிலும், டாக்டர் ராமதாஸ் அவர்களின் சுயநலத்திற்கு அரசியலை பயன்படுத்துவதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள் என்பதால் திசை திருப்பும் அரசியலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் திமுக மீது பழி போட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக, குரு இறப்பிற்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, தி.மு.க மீது பொய் புகார் கூறி சேற்றை அள்ளி இறைக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

இதை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும்.

– எஸ்.எஸ்.சிவசங்கர்,
மாவட்ட தி.மு.க செயலாளர்,
அரியலூர்.