தமிழகத்தில் மணல்கொள்ளை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசே மணல் விற்பனையை நடத்தினாலும், முறைகேடாக மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்கள், ஜாமின் கோரினால், குறிப்பிட்ட அளவிலான தொகை மாவட்ட நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப் பட்டு உள்ளது. ஆனாலும், மணல் கடத்தல், மணல் கொள்ளை குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் மணல்கொள்ளை வழக்கு தொடர்பனா விசாரணை, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 15 பேர் முன்ன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்தநீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைக்கிறது. அதனால் மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளமே இல்லாமல் போய் விடும். குடிதண்ணீருக்கு அடுத்த தலைமுறையினர் திண்டாட வேண்டியது வரும் என்று கூறினார்.
மேலும், இதுபோன்ற வழக்குகளில், முன்ஜாமீன் நிபந்தனையாக ரூ.25 ஆயிரம் விதித்தால், அதை செலுத்த இவர்களைப்போன்ற மணல் கடத்தல் கும்பல் தயங்குவதில்லை. அத்துடன், சிறைக்குள் போகாமல் முன்ஜாமீன் கிடைப்பதால் பலர் தைரியமாக கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும், மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோர் சில காலம் சிறையில் இருந்தால் தான் பயம் வரும். கடத்தல் குறையும். இயற்கை பாதுகாக்கப்படும்” என்று கருத்து தெரிவித்தார்.