சென்னை: தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வாரந்தோறும் நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் இனிமேல் நடத்தப்படாது என தமிழ்நாடு அரசின்  பொது சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வாரம்தோறும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இதுவரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று முகாம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகாம் இல்லை என்ற தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த சில வாரங்களாக முகாம்களுக்கு தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த காரணத்தினால்,  இனிமேல்  வாரந் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மெகா தடுப்பூசி முகாமை நடத்தலாம் என்றும்,  தமிழகத்தில் இதுவரை 92% பேர் முதல் தவணை தடுப்பூசி, 73% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும் முகாம்களால் தமிழகத்தில் சுமார் 4 கோடி பேர் பயனடைந்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.