கோயம்புத்தூர்: நிதி நிலைமை மோசமாக இருப்பதால், தமிழகத்தின் சில மாநகராட்சி நிர்வாகங்கள், தம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே தடுமாறி வருகின்றன.
இதனால், மாநில நிதிக்குழு சார்பில் மானியத்தை முழுமையாக ஒதுக்குவதற்கு அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, செலவினங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவசியமற்ற பணிகளை அரசு ஒத்திவைத்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டு விடுப்பு சரண்டர் சம்பளத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிமம் செலுத்துவதற்கு ஜூன் மாதம் வரை அவகாசம் வழங்கியிருப்பதானது உள்ளாட்சி அமைப்புகளை நிதி நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், வரி வசூலைக் கொண்டே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகின்றன. போதிய வருவாயின்றி, சில மாநகராட்சி நிர்வாகங்கள் சம்பளம் போடுவதற்கே தடுமாறி வருகின்றன.
சமீபகாலமாக, மாநகராட்சி நிர்வாகங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்காக பிடித்தம் செய்ததுபோக, மாநில நிதிக்குழு மானியமும் 20% ஒதுக்கப்படுகிறது. தற்போது வரி வசூலும் இல்லாததால், மாநகராட்சி நிர்வாகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
அதனால், தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கான தொகையை திருப்பிச் செலுத்துவதை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். உயிரைப் பணயம் வைத்து, கொரோனா எதிர்ப்பு போரில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.