சென்னை: இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி மெகா முகாம் நடைபெறாது என்றும்,  அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்க ளுக்கான 6 பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  போலியோ இல்லாத இந்தியாவிற்காக போலியோ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பல்ஸ் போலியோ முகாமை 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தேனாம்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். போலியோ சொட்டு மருந்து முகாமில், ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அனுமதிக்கின்ற நாளில் இருந்து தடுப்பூசி போடப்பட உள்ளதால், சனிக்கிழமை நடைபெற இருந்த  23 ஆவது மெகா தடுப்பூசி முகாம் அடுத்தவாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகின்றது. இருந்தாலும்,  அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த  நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.