சென்னை: அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதையடுத்து, தமிழக காவல்துறையினர் வரும் 10ம் தேதி முதல் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகிக்கும் ரஞ்சன் கோகாய் இந்த மாதம் ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறுவதற்குள் சில முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றுள் அயோத்தி வழக்கும் ஒன்று. அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை, மிக விரைவாக விசாரித்து முடித்தது உச்சநீதிமன்றம். அதன் தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 13 தீர்ப்பு வெளியாகும் தேதியாகவும் இருக்கலாம் என்று தகவல்கள் கசிகின்றன.
இந்நிலையில், அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தமிழகத்திலும் சில இடங்களில் மத மோதல்கள் நிகழ்ந்தன.
எனவே, தமிழகத்தில் தீர்ப்பையொட்டி ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக, வரும் 10ம் தேதி முதல் காவல்துறையினர் விடுப்பு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்தத் தடையுத்தரவு நீடிக்குமெனவும் கூறப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திலிருந்து இதுதொடர்பான சுற்றிறிக்கை காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.