மும்பை: பருவநிலை மாற்றங்களை சமாளிக்கும் வகையிலோ, அதிக மழைப்பொழிவை தாக்குப் பிடிக்கும் விதத்திலோ, மும்பை நகரின் உள்கட்டமைப்பு அமையவில்லை என்று தெரிவித்துள்ளார் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்தேஷி.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 2005ம் ஆண்டு மும்பை நகரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, பல்லாயிரம் கோடி செலவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ‍தேவைகள் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது.

மஹுல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பம்பிங் நிலையம் செயல்படத் தொடங்கினால் மத்திய மும்பையில் மழை நீர் தேங்காது. மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது, சஞ்சய்காந்தி தேசியப் பூங்காவில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது மற்றும் நகர்ப்புற காட்டுப் பகுதிகளை உருவாக்குவது உள்ளிட்டவை முக்கியமானவை.

இதுதவிர, கழிவுநீர் கையாளும் அமைப்பு தொடர்பான பணியை விரைவுபடுத்துதல், சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் வாழும் 15000 மக்களை மீள்குடியேற்றம் செய்ய திட்டமிடுதல் உள்ளிட்டவையும் அடக்கம்.

ஒரு நாளில் 2200 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கையாளும் அமைப்பு நமக்குத் தேவை. மும்பை மாநகரில் மட்டும் ஒரு நாளில் 3500 மில்லியன் கழிவுநீர் உற்பத்தியாகிறது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு மழைநீர் வடிகால் பாதையில்தான் செல்கின்றன. எனவே, நம் முன்பாக நிறைய பணிகள் பாக்கியிருக்கின்றன” என்றார்.