சென்னை:
எஸ்பிஐ வங்கியானது கோரிக்கை சீட்டு, அடையாள அட்டை நகல் பெறாமல் ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள அனுமதிக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக ரிசர்வ் வங்கி சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் எனவும் அதற்கான கால அவகாசமும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூபாய் நோட்டை மாற்றும்போது படிவம் மற்றும் அடையாளச் சான்று எதுவும் சமர்பிக்க தேவையில்லை என்று தனது அனைத்து கிளைகளுக்கும் அறிவித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று புழக்கத்தில் இருந்து ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெற்ற ரூ.2000 அனைத்து பொதுமக்களும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை எந்தவொரு கோரிக்கை சீட்டும் பெறாமல் மாற்றி கொள்ள அனுமதிக்கப்படும்என்று மே 20 தேதியிட்ட சுற்றறிக்கையில் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், அடையாளச் சான்றுகளும் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ரிசர்வ் வங்கி கரன்சி நோட்டை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமான டெண்டராக தொடரும் என்றும் கூறியுள்ளது. ஆனால் செப்டம்பர் 2023க்குள் அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்ய மக்களை அறிவுறுத்தியுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ செவ்வாய்க்கிழமை (மே 23) முதல் தொடங்குகிறது. இந்த வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான வங்கி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் மே 23 முதல் அனைத்து வங்கியிலும் ரூ.2,000 நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நோட்டுகளை மாற்றுவதற்கு தினசரி வரம்பு இல்லை என கூறியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து வங்கியிலும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரம்பு வரை ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

2000 ரூபாய் நோட்டுகளை ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் அல்லது நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம். இது வங்கி நிர்வாகிகளின் எண்ணிக்கை மற்றும் ஒரு குறிப்பிட்ட கிளையில் அவசரம் ஆகியவற்றைப் பொறுத்து மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நோட்டுகளை அனைத்து வங்கிக் கிளையிலும் மாற்றிக்கொள்ளலாம். அதேபோல், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அனைத்து வங்கிகளிலும் குறைந்த மதிப்புகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். பரிவர்த்தனைகளுக்கு, டெபாசிட்களுக்கு அரசாங்கம் எந்த வரம்பையும் விதிக்கவில்லை ஆனால் வாடிக்கையாளர் KYC விதிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.