அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று அறிவித்திருந்த படக்குழு, படத்தில் இடம்பெற்றுள்ள உனக்காக என்ற மெலடி பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்த படக்குழு, “பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம். படத்தின் தணிக்கை முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். எங்களை நம்புங்கள் சரியான நாளில் படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனை படைக்கும்” என்றும் தெரிவித்திருந்தனர்.