சென்னை: ஒளிப்பதிவு மசோதா மீது இறுதி முடிவு எடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்தியஅரசு பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதாவை  வெளியிட்டுள்ளது. அந்த மசோதாவின்படி,  தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு, பொதுமக்களிடம் இருந்து   ஆட்சேபனை வந்தால் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, படத்தை முடக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  திருட்டு வீடியோவிற்கு எதிராக அதிக தண்டனை உள்ளிட்ட வரைவுகளை சேர்த்துள்ளது.

இந்த மசோதாவில் உள்ள ‘தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்‘ என்ற வரைவு மிகவும் ஆபத்தானது, அதை நீக்க வேண்டும் என தமிழ்நாடு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து மாநில திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த மசோதா குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் பதில் தெரிவித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாமீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, அச்சட்டம் மீதான பரிந்துரைகள் ஆலோசனை கட்டத்தில் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளது.