டெல்லி: XE-என்ற புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு மும்பையில் கண்டறியப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவ்வாறு புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்தியஅரசு மறுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 10 மடங்கு அதிவேகத்தில் பரவும் ‘ஓமிக்ரான் XE’ என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதை மும்பை மாநகராட்சி உறுதி செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு ‘ஓமிக்ரான் XE’ குறித்து அறிவித்திருந்தது. அப்போது, புதிதாக உருமாற்றம் கொண்டிருக்கும் XE-என்ற இந்த வைரஸ் 10 மடங்கு வேகமாக பரவும் என்றும்,  இதில் சில அசாதாரண அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தது.  ”இங்கிலாந்தில் ஜனவரி 19ஆம் தேதி  XE உருமாற்ற ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து 637 பேர் இந்த வகை உருமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகின.

சார்ஸ்- கோவ்-  2 வைரஸை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 3 வகையான உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதாவது  XF, XE மற்றும் XD ஆகிய உருமாற்றங்கள் கண்டறியப் பட்டுள்ளன. டெல்டா மற்றும் ஒமிக்ரான் பிஏ.1 ஆகியவற்றின் உருமாற்றம் XD மற்றும் XF ஆகியவை ஆகும். XE என்பது ஒமிக்ரான் பிஏ.1 மற்றும் ஒமிக்ரான் பிஏ.2 ஆகியவற்றின் உருமாற்றம் ஆகும். ஒரே நேரத்தில் 2 அல்லது 3 உருமாற்றங்களால் ஒருவர் பாதிக்கப்படுவதால், இந்த வைரஸ் உருமாற்றம் நடக்கிறது. இதனால் மனித உடலில், மரபணுக்களில் மாறுபாடு ஏற்படுகிறது. ஏற்கெனவே பெருந்தொற்றுக் காலத்தில் இத்தகைய உருமாற்றங்கள் நடந்திருக்கின்றன” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தியாவின் மும்பை மாநகரில் ஒமிக்ரான்  XE மாறுபாடு வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளான பெண்மணி,  தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிப்ரவரி மாதம் இந்தியா வந்துள்ளார். மார்ச் மாதம் அவருக்கு கோவிட் உறுதி செய்யப் பட்டுள்ளது என தகவல்கள் பரவி மக்களிடையே பீதியை கிளப்பின.

இந்த நிலையில், இந்தியாவில் கோவிட் ‘எக்ஸ்இ’ மாறுபாடறு வைரஸ் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.  XE  மாறுபாட்டின் முதல் வழக்கு கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் ஊடக அறிக்கைகளை மறுத்துள்ளது. 

இது தொடர்பான மாதிரியின் FastQ கோப்புகள், ‘XE’ மாறுபாடு என்று கூறப்பட்டு, INSACOGஆல் (இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு)  பகுப்பாய்வு செய்யப்பட்டது, இது இந்த மாறுபாட்டின் மரபணு அமைப்பு மரபணுவுடன் தொடர்புபடுத்தவில்லை என்பது தெரிய வந்து இருப்பதாக கூறியுள்ளது.

“தற்போதைய சான்றுகள் இது COVID-19 இன் ‘XE’ மாறுபாடு என்று கூறவில்லை” என்று  என்று மறுத்துள்ளதுடன்,  கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்ப ரேஷன், “ஒரு நோயாளி ‘கப்பா’ வகையாலும், மற்றொருவர் ‘எக்ஸ்இ’ வகையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று மாதிரிகளின் வழக்கமான சோதனையின் அடிப்படையில் கூறியிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வைராலஜிஸ்டுகள், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், கோவிட்-பொருத்தமான நடத்தையைப் பின்பற்றவும் வலியுறுத்தி உள்ள நிலையில்,  நாட்டில் மற்றொரு COVID அலையை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த மாறுபாடு வலுவானது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.