மதுரை: டெல்லியில் பாஜக தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு, தமிழ்நாடு திரும்பிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,  அதிமுகவுடனான கூட்டணியில் குழப்பம் இல்லை என தெரிவித்து உள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் விருப்பமில்லை என்று கூறிய அண்ணாமலை, தற்போது நேர்மாறாக, கூட்டணியில் குழப்பம் இல்லை என கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியில் விருப்பமில்லை, தன்னை கட்டாயப்படுத்தினால், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட சாதாரண தொண்டனாக தனது பணியை செய்வேன் என்று கூறினார். அவரது பேச்சுக்கு வானதி உள்பட மூத்த பாஜக தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் பாஜக தலைமையிடம் புகாராக கூறப்பட்டது.

இதையடுத்து, நேற்று திடீரென டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு பாஜக தலைவர் ஜேபி நட்ட் மற்றும்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவிவந்தன. அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அண்ணாமலை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து மதுரை திரும்பிய அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் கூறியவர்,   “தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நான் டெல்லி சென்று அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அமித் ஷாவுடனான எனது சந்திப்பு வழக்கமானதே.

இந்த சந்திப்பின்போது பாஜக வளர்ச்சி, கட்சிப் பணிகள் பற்றி பேசினேன். தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசினேன். தமிழகத்தில் பாஜகவை வலிமையாக்குவது குறித்து பேசினேன். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஒரு இடைத்தேர்தல் நடந்துள்ளது தமிழகத்தின் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றார்.

அதிமுக கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை என்ன கூறியது என்ற கேள்விக்கு,   தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பற்றியே அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன். ஜக மக்கள் செல்வாக்கைப் பெற விரும்புகிறது.  நாங்கள் தமிழகத்தில் வேகமாக வளர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம்.  தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக வளர விரும்புகிறது. அது குறித்தே பேசினேன் என்றவர், கூட்டணி விவகாரங்களில் பாஜக மத்தியக் குழு தான் எந்த ஒரு முடிவும் எடுக்கும். ஆகையால் நான் கூட்டணி விவகாரங்கள் பற்றி ஏதும் பேசவில்லை என்றார்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எல்லாக் கட்சியினரும் அவர்கள் கட்சியே வளர வேண்டும் என்றே விருப்பம் இருக்கும். கூட்டணியில் இருந்தாலும் அவ்வாறே கட்சிகள் நினைக்கும், செயல்படும். மேலும், ஒரு கூட்டணியில் சிராய்ப்புகள், உரசல்கள் வருவது சகஜமே. மற்றபடி எங்கள் கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணி. எனக்கோ, பாஜகவுக்கோ எந்த ஒரு தனிப்பட்ட கட்சி, தலைவர் மீது கோபமில்லை” என்றார்.

முன்னதாக டெல்லி செல்லும் முன் செய்தியளார்களை சந்தித்த அண்ணாமலை, கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது, கூட்டணிக் கட்சி தலைவர்கள் என் மீது விமர்சனம் வைப்பதை வரவேற்கிறேன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை அவர்கள்விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. அவர்கள் கட்சியின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது என கவலைப்படுகின்றனர்.

கூட்டணிக் கட்சியாக இருந்தாலும்கூட, பாஜகவை வளர்க்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால் அவர்கள் முட்டாள்கள். அதேபோல் நான் இன்னொரு கட்சியை வளர்க்க வேண்டும் நினைத்தால், நானும் முட்டாள்தான்.

நேரமும் காலமும் வரும்போது கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பது குறித்து தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

மேலும்,  தமிழகத்தில் நடக்கும் கொலை,கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக வலைதளங்களில் மட்டும் காவல்துறை முழு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் 70 ஆயிரம் போலீஸார்இருக்கின்றனர். அவர்களை ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் கர்நாடகாவுக்கு தமிழக அரசுஅனுப்பி, அங்கே, நான் காவல்துறையில் பணியாற்றியபோது, யாரிடம் லஞ்சம் வாங்கி இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, அந்த நபரை தமிழகம் கூட்டிவந்து ஆளுங்கட்சியினர் பேசட்டும். தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில், நானோ, என் குடும்பத்தினரோ ஏதாவது பத்திரப்பதிவு செய்திருக்கிறோமா? சொத்து வாங்கி இருக்கிறோமா? எனக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது? என்பதை திமுகவினர் கண்டுபிடித்து, என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டுவார்களா? என திமுக அரசுக்கு சவால் விடுத்தார்.