சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவு வழங்கி வந்த சுயேச்சைகள் உள்பட சிலர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அதரவை விலக்கியுள்ளதால், அங்கு இன்று  பா.ஜ.க. அரசுமீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், மாநில பாஜக அரசுக்கு எதிராக வாக்களிக்க கூட்டணி கட்சியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. ஆட்சியை பிடிக்க  46 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., , ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

தற்போது அங்கு பாஜக தலைவர்  மனோகர் லால் கட்டார்  தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி  டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தால் அரசுக்கு அளித்த ஆதரவை இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.

மேலும், ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், அதிருப்தியில் உள்ளதாகத் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து,  முதல்வர் .மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க அரசு மீது, காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இதன்மீதான விவாதம் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இறுதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதற்கிடையில், டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், ஜனநாயக ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்களையும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதனால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.