உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் (ஆகஸ்ட் 12 – 14) உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் இன்று துவங்கியது.

இந்த உணவு திருவிழாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் இன்று காலை துவக்கி வைத்தார், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உடன் இருந்தார்.

சென்னையின் பிரபல உணவகங்களின் உணவு கூடங்கள் தவிர தமிழக அரசு சுகாதாரத் துறை மற்றும் கல்லூரி மாணவர்களின் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அரங்குகள் இடம்பெற்றுள்ளது.

 

தவிர மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விற்பனை அரங்குகளும் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையின் புறநகர் பகுதியில் நடைபெற்ற உணவு திருவிழாவின் போது பீப் பிரியாணி விற்பனைக்கு அம்மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாதது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

“பீப் பிரியாணி ஸ்டால் அமைக்க யாரும் விருப்பம் தெரிவிக்காததால் இந்த உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை” என்று தெரிவித்தார்.