மதுரை:

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை விதித்து மதுரை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதியப் பட்டுள்ள நிலையில், தனக்கு  முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான  விசாரணை  நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது,   பா.ரஞ்சித் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் தந்தை பெரியார் எழுதிய சுயமரியாதை சமதர்மம் என்ற புத்தகம், குடவாயில் பாலசுப்ர மணிய ன் எழுதிய தஞ்சாவூர் என்ற புத்தகம், வெண்ணிலா என்ற ஆசிரியர் எழுதிய தேவரடியார் என்ற புத்தகம் போன்றவற்றில் உள்ள கருத்துக்களையே ரஞ்சித் பேசியதாக கூறினார்.

அப்போது  இடையில் குறுக்கிட்ட நீதிபதி, ராஜராஜ சோழ மன்னரை இலக்காக வைத்து பேச வேண்டிய அவசியம் என்ன?  பண்டைய காலத்தில் நடந்ததை தற்போது ஏன் பேச வேண்டும்? என  கேள்வி எழுப்பினார்.

விசாரணையின்போது,  பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, அவரை கைது செய்ய மாட்டோம் என்றும் உறுதி அளித்தது.

இதையடுத்து வரும் 19-ம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, அதற்குள் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணையை ஒத்தி வைத்தார்.