டில்லி,

ற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிமுக எம்பி.யும், பாராளுமன்ற துணைசபாநாயகருமான தம்பித்துரை மத்தியஅரசு மீது குற்றம் சாட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வரன   அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு டில்லி  தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு,  தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது,  “பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழகத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி இதுவரை வரவில்லை என்றும், ஜிஎஸ்டியால் தமிழகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, அதற்கான இழப்பீடு நிதியையும் மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் அதிமுக அரசு  உறுதியாக இருப்பதாகவும்,  ஒரே இந்தியா என்ற கொள்கையை அ.தி.மு.க. எதிர்க்கும் என்ற அவர்,  ஒரே நாடு என்று கூறி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு குவித்துக்கொள்வது நல்லதல்ல என்றார்.

நாட்டில் உள்ள  அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த கேள்விக்கு, மேலும் செலவு குறையும் என்பதால் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது. அதை நான் வரவேற்கிறேன்” என்றார்.