மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என  இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ கட்சியின் மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (Social Democratic Party Of India (SDPI) தமிழ்நாடு கிளை சார்பில்,  மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே  மதசார்பின்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,  எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த மேடைதான் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு எல்லா மதத்தலைவர்களும் இருக்கிறார்கள்.

நான் முதல்-அமைச்சராக ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. என்னுடைய வளர்ச்சியை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது. நான் கட்சியில் கடுமையாக உழைத்து கிளைச்செயலாளர் பதவியில் இருந்து பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் வந்தேன்.

ஆனால் என்னை தவழ்ந்து வந்து ஆட்சிக்கு வந்தவர் என விமர்சிக்கிறார்கள் என்றவர், மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வாரிசு என்ற அடிப்படையில் முதல்-அமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் வந்துள்ளார். திமுக ஒரு பச்சோந்தி.. திமுகவிற்கு வேண்டியது ஒரு அதிகாரம் தான். கருணாநிதி ஆட்சி செய்து வந்தார். அதன் பிறகு ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். இப்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார்.. மக்களை பற்றி கவலையே கிடையாது. நாட்டு மக்கள் எக்கேடு கெட்டு போனால் அவர்களுக்கு என்ன கவலை. மக்களை ஏமாற்றுவது திமுகவுக்கு கை வந்த கலை.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் அனைவரும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு அரசாங்கம் சிறப்பாக இருந்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். இன்றைய ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறால்.. அடிக்கும் கொள்ளையால் இன்றைக்கு தமிழ்நாடு சீரழிந்துகொண்டு இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு நிதி அமைச்சராக இருக்கும் ஒருவர் சொல்கிறார்.. பொருளாதார நிபுணர் சொல்கிறார்.. உதயநிதியும், சபரீசனும் ரூ.30,000 கோடியை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருப்பதாக சொல்கிறார். அப்படியென்றால் 2 ஆண்டு ஆட்சி காலத்திலே ரூ.30,000 கோடி கொள்ளையடித்தது தான் திமுகவின் சாதனையாக மக்கள் பார்க்கின்றார்கள்.

இந்த பணத்தை எல்லாம் சிறுபாண்மை மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியிருந்தால் இவர்கள் உங்களை மனதார பாராட்டியிருப்பார்கள். இத்தனை பணத்தையும் கொள்ளையடித்து என்ன செய்ய போறாங்க என்று தெரியவில்லை. கொள்ளை அடிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்ட கட்சி திமுக. மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள். ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் ஆகா.. கூட்டணி வைத்துவிட்டார்கள் என்று சொல்வார்கள்.

கூட்டணிக்காக அதிமுக எப்போதும் கொள்கையை விட்டுக்கொடுக்காது. சூழ்நிலைக்காக அன்று கூட்டணி வைத்தோம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மிகப்பெரிய வளர்ச்சிபெறும். ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் அந்த கட்சி பின்னுக்கு தள்ளப்படும்.

இன்று நடக்கும் உலக மூதலீட்டாளர் மாநாட்டில் 3000 பேர் கலந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்கள். 3,00 பேர் தமிழகம் வந்து தொழில் செய்ய போகிறார்களா?… ஏற்கனவே ஒரு உலக முதலீட்டாளர் மாநாடை நடத்தி புரிதல் ஒப்பந்தம் போட்டீர்கள்.. அதில் எத்தனை ஆயிரம் கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதனால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்று உங்களால் வெள்ளை அறிக்கை விட முடியுமா?

நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பா.ஜனதா.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இனி பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை, நாடாளுமன்ற தேர்தல் உள்பட அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன்  கூட்டணி இல்லை என அறிவித்து விட்டோம். இதனை முதல்-அமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவர் அ.தி.மு.க.வையும், பா.ஜனதாவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

நான் 4½ ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன். கட்சியை விட்டுச் சென்ற நபரை (ஓ.பன்னீர்செல்வம்) அ.தி.மு.க.வில் வைத்துக் கொண்டு நான்பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. வரும் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியோடு, நிறைய கட்சிகள் வர உள்ளன. எனவே நாங்கள் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு  பேசினார்.

இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, தமிழக எதிர்கட்சி தலைவர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொது செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸூருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா, மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மதுரை வடக்கு- தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.