No leak, biometric data : centre

ஆதார்

ஆதார் அமைப்பிலிருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்றும், அரசு துறைகள் நிர்வகிக்கும் சில இணையதளங்களில் இருந்து கசிந்திருக்கக் கூடும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

கண் விழி மற்றும் கைரேகை பதிவுகள் மூலமாக எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்று முன்னதாகவே மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆதார் அட்டை தொடர்பான தகவல்கள் வெளியாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், ஆதார் தொடர்பான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மத்திய அரசின் தரப்பிலிருந்து பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

வாதத்தில், ஆதார் அமைப்பிலிருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் சேகரிக்கப்பட்ட தகவல்களில் வெளிப்படை தன்மை எதுவும் இருக்காது, பாதுகாப்பாகவே உள்ளது என்றும் தெரிவித்தது. ஆதார் அமைப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாக வாய்ப்பில்லை, ஒரு சில அரசு துறைகளில் இருந்து தகவல்கள் கசிந்திருக்கலாம் என்றும் தெரிவித்தது.

 

நாட்டில் போலி பான் கார்டுகள் அதிகமாக உள்ளதால், ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க உள்ளதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவது குறையும் என்றும் கூறப்பட்டது.

 

மத்திய அரசின் வாதம் முடிந்த பிறகு, மனுதாரர் சார்பாக ஆஜரான ஷியாம் திவான் தனது வாதத்தை தொடங்கினார். அப்போது, ஆதார் அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு முயன்று வருவது முற்றிலும் முரணான ஒன்று என்று தெரிவித்தார். ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்றும் வாதிட்டார். மக்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிடுவதாக ஆதார் உள்ளதாகவும், ஆதார் தகவல்களை சில தனியார் நிறுவனங்கள் தவறான நோக்கங்களுக்காக திருடி வருவதாகவும் புகார்கள் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். கை விரல் ரேகை அடையாளம் மட்டுமே மனிதர்களுக்கு அதிகபட்ச அடையாளம் என்றும், அதைப் பராமரிப்பதில் நாம் தோற்றுவிட்டால், தனிமனித உரிமை முற்றிலும் காணாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

இதுதொடர்பான வாதம் உச்சநீதிமன்றத்தில் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.