டெல்லி: உக்ரைனில் இருந்து வரும் மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப் முடிக்காமல் இருந்தால், அவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வை (FMGE/Foreign Medical Graduates Examination /வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி களுக்கான தேர்வு) எழுதி தேர்ச்சி பெற்றால், அவர்கள் இந்தியாவில் இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், மருத்துவ படிப்பினை தொடர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இறுதியாண்டு வரை பலர் படித்து முடித்தும் பலர் இன்டர்ஷிப் முடிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, அங்கு படித்து வந்த ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் படிப்பை விட்டு விட்டு தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேற்றப்படும்  இந்திய மருத்துவ மாணவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,  போர் போன்ற கட்டாய சூழ்நிலைகளால் முழுமையற்ற இன்டர்ன்ஷிப்பைக் கொண்ட வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை, இந்தியாவில் நடத்தப்படும், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வான FMGE-ஐ (Foreign Medical Graduates Examination) முடித்தால், அவர்கள் இந்தியாவில் முழுமையான இன்டர்ன்ஷிப் களுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு  உலக நாடுகள் கல்வி நிலையங்களை மூடி ஊரடங்கு அறிவித்ததால் பல ஆயிரம் மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்பினர். அவர்களில்  ஒன்பதாவது பருவத் தேர்வை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, சுமார்  21,000 பேர் தேர்வை எழுதினர். அவர்களில் மொத்தம் 2,722 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில்  தமிழகத்தைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் மட்டும் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து அவர்கள் தங்களை மருத்துவமனை பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.