சாதனைகளின் குவியல்…. கே சங்கர்..

சிறப்பு கட்டுரை : மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

புகழ்பெற்ற பல விஷயங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவற்றின் பின்னால் இருக்கும் சாதனையாளர்கள் இவர்கள்தான் என்பது பற்றி நிறைய பேருக்கு தெரியவே தெரியாது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் திரையுலக ஜாம்பவான் என இயக்குனர் கே.சங்கர்.

தமிழ் சினிமாவின் டாப் 10 டைரக்டர்களில் ஒருவர் என்று தைரியமாக குறிப்பிடலாம். எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் ஆகிய மூவேந்தர்கள் வைத்து மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சங்கர்.

பிரமாண்டமான படங்களின் மூலம் இன்று பெயர் பெற்றிருக்கும் இயக்குனர் ஷங்கர் ருசியான ஹோட்டல் சாப்பாடு என்றால் இந்த சங்கர் என்றென்றைக்கும் ருசிக்க கூடிய வீட்டு சாப்பாடு போன்றவர். ஆலயமணி, குடியிருந்தகோவில், அடிமைப்பெண் என பிரமாண்டமான காவியங்களை தமிழ்சினிமாவில் தந்தவர்.

எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய சங்கர், 1959ல் மருது சகோதரர்களின் வீரத்தை திரையில் காட்டியவர். கண்ணதாசன் சொந்தமாக தயாரித்து வசனங்களை தெறிக்கவிட்ட சிவகங்கை சீமை படத்தில் வசன உச்சரிப்பில் சிவாஜியைவிட ஒருபடி நான்தான் மேலே என மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன்.

அதே ஆண்டில் சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்து பெரிய அளவில் பேசப்பட்டதால் சங்கரின் சிவகங்கை சீமை அந்த அளவுக்கு பேசப்படாமல் போய்விட்டது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கவிஞரின் வரிகளை போல, இயக்குனர் சங்கர் என்ற மனிதரின் திறமை மங்கி விடவில்லை.

1962ல் ஆலயமணியை சங்கர் தந்தபோது, அந்த காலத்தில் பாராட்டு மழை பொழியாத பத்திரிகைகளே கிடையாது.. சட்டி சுட்டதடா,, கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, பொன்னை விரும்பும் பூமியிலே, தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என எத்தனையோ பாடல்கள் ஆலயமணியில்..

படத்தில், சிவாஜியை தாண்டி எஸ்எஸ் ராஜேந்திரன் சரோஜாதேவி, விஜயகுமாரி எம் ஆர் ராதா, வி.நாகையா என ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள்.. அத்தனை பேருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அற்புதமாக ஆலயமணியின் ஒசையை கேட்கச்செய்தவர் கே.சங்கர். ஆலயமணி தயாராகும்போதே இன்னொரு பக்கம் எம்ஜிஆரை வைத்து பணத்தோட்டம் படத்தை இயக்கியவர். அதிலும் பாடல்கள் செமையாக ஹிட் அடித்தன.

சரோஜாதேவியின் தலையில் ரொமாண்டிக்காக தட்டியபடி எம்ஜிஆர் பாட ஆரம்பிக்கும் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா, பாடல் திரையில் ஓடி முடியும்போது, அடச்சே இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று ஏக்கப்படும் அளவுக்கு பணத்தோட்டம் பாடலை படமாக்கியிருப்பார்

பணத்தோட்டத்தின் இன்னொரு பாடலான,” என்னதான் நடக்கும் நடக்கட்டுமே”” பாட்டு எம்ஜிஆர் தத்துவ பாடல்களில் டாப் டென்னில் ஏறி அமர்ந்துகொண்டது அதே மாதிரி சங்கர் இயக்கிய பாதகாணிக்கை படத்தில்தான். காலங்களை எல்லாம் கடந்து விஞ்சி நிற்கும் ‘’வீடுவரை மனைவி, வீதிவரை உறவு காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?’’ என்ற தத்துவ பாடல்.

ஆலய மணிக்குப் பிறகு சிவாஜியை வைத்து இயக்கிய இன்னொரு படம் ஆண்டவன் கட்டளை. சிவாஜிக்கு ஏராளமான மயில்கள் படங்கள் என்றால் நடிகை தேவிகா அது ஆண்டவன் கட்டளை ஒரு மைல்கல் படம். அந்த படத்தில் தேவிகாவின் சிருங்கார முகபாவனைகளை இயக்குனர் சங்கர் திரையில் பதிவு செய்த விதம், அந்த படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

அப்புறம் இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சரோஜாதேவிக்கு நடிப்பு ரீதியாக பெரிய ஸ்கோப் ஏற்படுத்தித் தந்த முக்கியமான இரண்டு டைரக்டர்களில் பீம்சிங் ஒருவர். இன்னொருவர் கே.சங்கர்.

கைராசி, ஆடிப்பெருக்கு ஜெமினி- சரோஜாதேவி காம்பினேஷனில் கண்ணீர் காவியங்களை தந்து அவற்றை மெகா ஹிட்டாகவும் காட்டியவர். இந்திய கனவுக்கன்னி யாக மாறிய ஹேமா மாலினி, முன் தடவையாக வெள்ளித்திரையில் முகம் காட்ட வாய்ப்பு வந்தது சாட்சாத் நம்ம சங்கர்தான்.

1963 ல் அசோகன் கதாநாயகனாகவும் சந்திரகாந்தா கதாநாயகியாக நடித்து வெளியான படம், இது சத்தியம். இந்தப் படத்தில்தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் ஹேமமாலினி.

தமிழுக்கும் அமிழ்தென்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கேஆர் விஜயா பாடுவாரே, அந்த பாடல் இடம்பெற்ற பஞ்சவர்ணகிளி என்ற படமும் சங்கர் இயக்கிய வெற்றிப்படம்தான்.

பாரதிதாசனின் கவிதைகளுக்கு அப்படியொரு பிரியர் சங்கர், கலங்கரை விளக்கம் படத்தில சங்கே முழங்கு, சந்திரோதயம் படத்தில் புதியதோர் உலகம் செய்வோம்,, அதே புதியதோர் உலகம் செய்வோம் பாடலை வேறொரு டியூனில் பல்லாண்டு வாழ்க படத்தில் வரும்.. எல்லாமே டைரக்டர் சங்கரின் முத்திரைகள்..

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி பிரிந்து எம்எஸ்வி தனியாக இசையமைத்தது சங்கரின் கலங்கரை விளக்கம் படத்திற்குத்தான்.

இரட்டை வேடத்தில் பட்டைய கிளப்பிய எம்ஜிஆரின் குடியிருந்த கோவிலும், அடிமைப்பெண் படங்களையும் அதன் பாடல்களையும் விறுவிறுப்பான காட்சிகளையும் விவரிக்க நாள் போதாது.. ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம். துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்து ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா வரை போகவேண்டும்.

எஸ்பி பாலசுப்ரமணியமும், ஜெயலலிதாவும் முதன் முதலாக தமிழ் சினிமாவில் பாடியது சங்கரின் இயக்கத்தில் தான்.. இப்படி எண்ணற்ற முத்திரை சம்பவங்கள் சங்கரின் வரலாற்றில்..

மக்கள் திலகம் எம்ஜிஆர் இருக்கும் கே.சங்கருக்கும் மிக மிக நெருக்கம் அதிகம். எம் ஏ திருமுகம் மற்றும் ப.நீலகண்டனுக்கு அடுத்தபடி எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை இயக்கியது சங்கர்தான். எம்ஜிஆரின் அண்ணனான என்று சக்கரபாணியின் மகளைத் தான் ஷங்கர் தனது மகனுக்கு மணம் முடித்தார். அந்த வகையில் எம்ஜிஆரின் சம்பந்தியாவார் சங்கர். சக்கரபாணியின் மகன் எம் சி ராமமூர்த்தி தயாரித்த இந்திப் படத்தையும் ஷங்கர்தான் இயக்கினார். இதேபோல சக்கரபாணியின் மகன் எம்ஜிசி சுகுகுமாரை வைத்து குங்குமம் கதை சொல்கிறது என்ற படத்தையும் இயக்கியவர்.

எம்ஜிஆர், சிவாஜி ஜெமினி ஆகிய மூவரையும் வைத்து பல இடங்களை கொடுத்த சங்கர், பின்னாளில் பக்திப்படங்களை இயக்கி இறையருட் செல்வர் என்ற பட்டத்துக்கே சொந்தக்காரர் ஆனார். ஏராளமான மினி நட்சத்திரப்பட்டாளங்களை வெளி நாட்டில் வைத்து படம்பிடித்து 1978ல் வருவான் வடிவேலன் என்ற படத்தை வெளியிட்டார் டைரக்டர் சங்கர்.

வசூலா அது? தியேட்டர்களே பெண்கள் படையெடுக்கும் கோவிலாக மாறிப்போன ஆச்சர்யமான கட்டம்.

இன்றைக்கு ஒவ்வொரு மேடையிலும் இளையராஜா புகழ் பாடுகிறதே ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ என்ற பாடல்.. அதை தனது தாய் முகாம்பிகை படத்தில் உருப்பெறச்செய்தவர் இறையருட்செல்வர் டைரக்டர் சங்கர்தான்..

இயக்குனர் ஷங்கரின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று.