2024 நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளதை அடுத்து பீகார் மாநில அரசியலில் மீண்டும் அனல் பறக்க துவங்கியுள்ளது.

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்திய நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் தலைவராகும் எண்ணத்தில் இருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை கூட்டணி தலைவராக அறிவித்ததை அடுத்து நிதிஷ் குமார் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக கலக்கத்தில் உள்ள மாநிலங்களை ஆளக்கூடிய திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் ராகுல் காந்தியின் யாத்திரையை கைவிடவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்து அவரது யாத்திரையை முடக்கவும், அதிருப்தியில் உள்ள மாநில கட்சிகளை தங்கள் வசம் இழுக்கவும் பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பீகார் மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜெ.டி. கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக உடன் கைகோர்க்க அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருக்கும் நிதிஷ் குமார் முதல்வராக பதவியில் நீடிக்க தேவையான ஆதரவை பாஜக வழங்க உள்ளதாகத் தெரிகிறது.

இன்னும் ஓரிரு நாளில் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என்றும் பீகார் மாநிலத்தின் நிரந்தர முதல்வராக நீடிக்கும் கனவில் நிதிஷ் குமார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் தொடர்வதா அல்லது அதிலிருந்து வெளியேறுவதா என்பதில் இந்த கட்சிகளுக்கு குழப்பம் நீடித்து வருகிறது.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சியை முடக்குவது மட்டுமே தங்கள் நோக்கம் என்று கூறிவரும் பாஜக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்து எதிர்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்கும் எதேச்சதிகார மனநிலையுடன் பாஜக செயல்பட்டு வருவதையும் உணர்ந்துள்ளனர்.

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தப்பித் தவறி பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று எந்த ஒரு கட்சியின் தயவும் இன்றி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தங்கள் கட்சிகள் மாநிலத்தில் இருந்தே காணாமல் போகும் நிலை ஏற்படும் என்றும் கலக்கத்தில் உள்ளனர்.

இருந்தபோதும் நிதிஷ் குமாரின் நிரந்தர முதல்வர் கனவு என்னவாகும் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் உறுதியாக தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.