பாட்னா: நாதுராம் கோட்சே குறித்து பாரதீய ஜனதாவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் கூறிய கருத்து எந்தவகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும், கட்சியிலிருந்து அவரை நீக்குவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.

பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், இன்று பாட்னாவில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “காந்தியடிகள் இந்த நாட்டின் தந்தை. எனவே, அவரைக் கொன்ற கோட்சேவை குறித்து யாரும் இப்படி பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, அவரைக் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து கட்டாயம் பரிசீலிக்க வேண்டும்.

இது பாரதீய ஜனதாவின் உள்கட்சிப் பிரச்சினையாக இருந்தாலும், இந்தப் பிரச்சினை நாட்டின் கோட்பாடு சார்ந்த ஒன்றாகிறது. எனவே, இதை சகித்துக்கொள்ள முடியாது” என்றுள்ளார்.