ஆட்சியில் சம பங்கு தருவதாக எதுவும் பேசவில்லை: மறுப்பு தெரிவிக்கும் நிதின் கட்கரி

Must read

மகாராஷ்டிராவில் ஆட்சியில் சமபங்கு தருவதாகவும், அமைச்சர்களை சம அளவில் பிரித்துக்கொள்வது தொடர்பாகவும் பாஜக – சிவசேனா இடையே தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் நடைபெறவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஆட்சியில் சமபங்கை சிவசேனா கேட்டு பிடிவாதம் செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 15 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மத்திய அமைச்சரும், மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவருமான நிதின் கட்கரி முயற்சி மேற்கொண்டுள்ளார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிதின் கட்கிரி, “சிவசேனா, பாஜக இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க நான் வரவில்லை. அதேசமயம், எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஆட்சி அதிகாரத்தை சமபங்கு பிரித்துக் கொள்வது தொடர்பாக பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.

சிவசேனாவின் மறைந்த தலைவர் பால் தாக்கரே ஒருமுறை ஆட்சி அமைப்பது குறித்துக் கூறுகையில், பாஜக- சிவசேனா இடையே கூட்டணி அமைந்து அதில் சிவசேனா அதிகமான இடங்களை வென்றால், முதல்வர் பதவி குறித்துப் பேசும் என்று தெரிவித்திருந்தார். நான் இதுவரை எந்த அரசியல் தலைவரையும் சந்திக்கவில்லை. இன்றும் சந்திக்கவில்லை. தேவைப்பட்டால், கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் நான் தலையிடுவேன்” என்று தெரிவித்தார்.

More articles

Latest article