டில்லி

நீண்ட நாட்களாகத் தமிழகத்தில் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டில் முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நெடுநாட்களாக 9 நெடுஞ்சாலை திட்டங்கள் நிலுவையில் உள்ளது.   இந்த திட்டம் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் ராஜேஷ்குமார் எழுத்துப் பூர்வமாகக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.  இதற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பதில் அளித்துள்ளார்.

நிதின் கட்கரி, அளித்த பதிலில் “தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்தாண்டு செப்டம்பருக்குள் முடியும்.   கொரோனா பேரிடர் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தாலும் ஒப்பந்ததாரர்களின் மெத்தனத்தாலும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது

மேலும் தமிழக அரசின் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் நிலம் கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்  சம்பந்தப்பட்ட ஆணையம் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் மூலம் சென்னை முதல் தடா வரையிலான 6 வழிச்சாலை செட்டி குளம் முதல் நத்தம் வரையிலான 4 வழிச்சாலை, சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான 4 வழிச்சாலை உட்பட 9 முக்கிய சாலை திட்டங்கள் நடப்பாண்டிற்குள் முடிக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.