மும்பை

ணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு சில மணி நேரம் முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி ரூ.90 கோடி முதலீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரபல நகை வியாபாரியான நிரவ் மோடி, மற்றும் அவர் பங்குதாரர் மீது ரூ.11400 கோடி மோசடி செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் கொடுத்துள்ளது.   இது தொடர்பாக அவருடைய பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   ஆனால் அதற்கு முன்பே நீரவ் மோடி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஜித் மேமன், “கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிக்கப் பட்டது.   ஆனால் அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ரூ.90 கோடியை நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

இது அனேகமாக தங்கமாக மாற்ற முதலீடு செய்யப்பட்டிருக்கலாம்.   இது குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.  மேலும் மத்திய பாஜக அரசுக்கு தெரியாமல் இந்த முதலீடு நடந்திருக்காது”  என நிரவ் மோடி மீது குற்றம் சாட்டி உள்ளார்.   இந்தக் குற்றச்சாட்டு அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி உள்ளது.

இதே பொன்ற ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.