சென்னை: கேரளாவில்  நிபா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இதனால், சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக எல்லையோர மாவட்டங்களில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ள தமிழ்நாடு அரசு,  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

கேரளாவில் மாநிலத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்த நிபா வைரசால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ்  அறிகுறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.  நிபா வைரஸ் பரவலை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.

நிபா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக,  தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள்மீது மருந்து தெளிக்கப்படுவதுடன், வாகனங்களில் வரும் அனைவருக்கும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடமை பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை இருப்பினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில்,  நிபா வைரஸ்  தொடர்பாக,  தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு  சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

காய்ச்சல் தொடர்பாக மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

தேவைப்படும் நபர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நிபா வைரஸ் காய்ச்சல் பிரிவு, அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டோர் பிரிவில் எக்காரணம் கொண்டு ம் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத்துறை ஊழியர்கள் பிபிஇ கிட் அணிவதுடன், முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிவது அவசியம்.

மருத்துவ உபகரணங்கள் தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்.

பயன்படுத்தப்பட்ட சிரஞ்ச் ஊசியை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்,

பயன்படுத்திய ஊசிகளை மூடிய கலனில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் நோயுற்ற, அறிகுறி உடைய நோயாளிகளை கையாண்ட பிறகு 20 நொடிகள் சோப்பால் கை கழுவிய பிறகே சுகாதார பணியாளர்கள் இதர பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் தாக்குதல்  அறிகுறிகள் ?

பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் அயர்ச்சி ஏற்படும். நிலை தடுமாறும், மனதில் குழப்பம் நிலவும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும்.

இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே சம்பவித்துவிடும். வைரஸின் அடைகாக்கும் காலம் 4-14 நாட்கள் ஆகும். இந்த கடுமையான நோயால் சுமார் 40% நோயாளிகள் தங்கள் உயிரை இழக்க நேரிடும்.

நிபா வைரஸ் தொற்றைக் கண்டறிய, எலிஸா பரிசோதனைகள் உள்ளன. இதன்மூலம், இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். மேலும், பிசிஆர் பரிசோதனை மூலமும் இதனை உறுதி செய்யலாம். இப் பரிசோதனையை புணேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமே செய்ய இயலும். இந்தப் பரிசோதனைக்கு ரத்தம், சிறுநீர், முதுகிலிருந்து பெறப்படும் தண்டுவட நீர், சளி, உமிழ்நீர், தொண்டை மற்றும் நாசிப்பகுதி நீர் ஆகியவை பயன்படுத்தப்படும்.