சென்னை:

கேரளாவில் வவ்வால்களால் பரவும் நிபா வைரஸ் பரவி வருவதால், தமிழகத்திலும் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் வவ்வால்  கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என  தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பதாக கேரள மாநில அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  குறிப்பாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களை கண்காணிக்கும்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும்,  இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பூசி இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

நிபா வைரஸ் வவ்வால், பன்றி மூலம் மனிதனுக்கு பரவுகிறது. எனவே வவ்வால் கடித்த பழங்களை யாரும் சாப்பிட வேண்டாம்… இதில் இருந்து தற்காத்து கொள்ள பழங்களை தண்ணீரில் நன்றாக  சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.   வவ்வால் கடித்த பழங்களை  மனிதர்கள் சாப்பிடுவதால், இந்த வைரஸ் தொற்று  பரவும் என்று எச்சரிக்கை விடுத்தார்

இதன் காரணமாக சுவாசக்கோளாறுகள், மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா காய்ச்சல் போன்றவை நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாக உள்ளன. நிபா வைரஸ் அறிக்குறிகள் தென்பட்டால் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.