சென்னை: நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக  மாவட்ட தேர்தல் அதிகாரியான உதவி செலவினப் பார்வையாளர் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இது கடுமையான பிரசாரம் நடைபெற்றுவரகிறது.  மாவட்ட நிர்வாகம், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மற்ற கட்சி வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை கொடுப்பதாகவும் பரவலாக புகார்கள் கூறப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவின விவரங்களைக் குறைத்துக் காட்டும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் அருணா தன்னை  தொந்தரவு செய்வதாக உதவி செலவினப் பார்வையாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது புகார் கடிதத்தில்,  தேர்தல் செலவு விவரங்களை கணக்கிட்ட போது திமுக வேட்பாளர் ஆ.ராசா தாக்கல் செய்த செலவில் பல லட்சம் ரூபாய் வித்தியாசம்  உள்ளது. இதை சுட்டிக்காட்டியதாகவும்,  இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அருணா, கடந்த 8-ம் தேதி திமுக வேட்பாளரின் செலவின விவரங்களை ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு கொண்டுவரச் சொல்லி பார்வையிட்டு ஆவணங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், வேட்பாளரின் செலவு விவரங்களில் ஏதாவது பாதகமாக நடக்கக் கூடாது, அதற்கான நடவடிக்கை எடுங்கள் என தன்னை தேர்தல் அதிகாரி மிரட்டியதாகவும்  புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீலகிரி தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் உதவி செலவின் பார்வையாளர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், உதவி செலவின பார்வையாளர் அளித்த புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.  

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு தொகை செலவிடலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரையறை வகுத்துள்ளது.  அதன்படி, 2024 நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம். இதில் தேர்தல் பிரசாரக் கூட்டம், உணவு, கொடி, மாலை, வாகன விவரம், ஓட்டலில் தங்கும் செலவு உள்பட அனைத்தும் அடங்கும்.  இந்த தொகையை தாண்டி செலவு செய்தால் அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.