சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ள தமிழகஅரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, 20ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழகஅரசுகொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கும் 20.4.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது:-

மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம்/ ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.