அகமதாபாத்: கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்கம் டிசம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த 23ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அகமதாபாத் நகராட்சிக்குட்பட்டப் பகுதியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த 57 மணி நேர பொதுமுடக்கம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந் நிலையில் அகமதாபாத் காவல்துறை ஆணையர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா டிசம்பர் 7ம் தேதி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
நவம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கும். அந்த நேரங்களில் மக்கள் சாலைகள், வீதிகள் அல்லது பொது இடங்களில் நடமாடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.