திருவனந்தபுரம்:

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக  ‘நிபா’  எனும் அரிய வகை வைரஸ் நோய் மக்களை மிரட்டி வருகிறது.  வவ்வால்கள் மூலம் பரவும் ஒருவகை வைரஸ் நிபா வைரஸ் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணத்தை தழுவி வருகிறார்கள்.

நிபா வைரஸ் தொற்றுதலுக்கு ஆளானவர்கள்,  மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதல்கள் தற்போது கேரளாவின்  கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் பரவி வருகிறது.  இதுவரை ஒரு செவிலியர் உள்பட  14 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தைசேர்ந்த மதுச்சூதனன் என்பவரும்,  முக்கம் பகுதியச்சேர்ந்த அகில் என்ற இளைஞரும் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 9 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்குரிய சந்தேகத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.