சென்னை; கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் பந்த் என்று கூறி கடைக்காரர்களை இவர்கள் மிரட்டனால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது கட்சிக்காரர்கள் மக்களை மிரட்டி பந்த் நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவை கார் வெடிப்பு மற்றும் உயிரிழந்த முபினின் டைரியில் கிடைக்கப்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள், அங்கு 5 இடங்களில் கார் குண்டு வைக்க திட்டமிட்டுள்ள சதி அம்பலமாகி உள்ளது. ஏற்கனவே கோவையில் பெட்ரோல் பாம்ப் வீசப்பட்டபோது, முறையான நடவடிக்கை எடுத்து விசாரணை செய்திருந்தால், இந்த சம்பவம் நடைபெறுவதை தவிர்த்திருக்க முடியும் என்று முன்னாள் காவல்துறை தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த கார் வெடிவிபத்து சம்பவத்தில் கோவை மாவட்ட காவல்துறை தோல்வியை சந்தித்துள்ளது என்று சமூக வலைதளங்களிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களை சுட்டிக்காட்டியதுடன், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, தமிழகஅரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசு மறைத்த தகவல்கள் வெளியானது தமிழக மக்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கையை தகர்த்தெறியும் வகையில் உள்ளது. இதையடுத்து, தமிழகஅரசு, கோவை கார் வெடி விபத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், கோவையில் அமைதி நிலவ மாவட்ட ஆட்சியர், ஜமாத் அமைப்பினரை அழைத்து பேசினார். அப்போது, பயங்கரவாத செயல்கள் தொடர்பான தகவல்கள் வந்தால், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, இன்று, தமிழ்நாடு மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட திமுக பொறுப்பாளருமான அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பங்கேற்பு, மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வரின் உத்தரவின்பேரில் கோவையில் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தவறு செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால்தான் மக்கள் இயல்புநிலையில் தீபாவளியை கொண்டாடினர் என்று தெரிவித்தார்.
மேலும், சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் காரின் உரிமையாளர் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டது என்றவர், முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது, பாஜகவினர் என்ன செய்தனர்? கோவை சம்பவத்துக்காக போராட்டம் நடத்தும் பாஜக, மக்கள் பிரச்சினைக்காக ஏன் போராடவில்லை? என்றவர், இந்த விஷயத்தில் காவல்துறையினர் முறையாக விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பே, சம்பவம் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அண்ணாமலைக்கு தகவல்களை கொடுத்தது யார் என என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
எதாவது செய்து.. எப்படியாவது மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டு பண்ண கூடாதா என்று சிலர் நினைக்கிறார்கள். நீங்கள் ஒருவரை பற்றி கேள்வி கேட்கிறீர்கள் (அண்ணாமலை).. அவரும் கூட சீருடை அணிந்த நபர்தான். அவர் விசாரணை அதிகாரியாக இருந்த போது பொதுவில் அனைத்தையும் சொல்ல முடியுமா? யுகத்தின் அடிப்படையில் பேச முடியுமா? முழுதாக விசாரணை செய்த பின்புதான் பேச முடியும். அவரை மாதிரி நாங்கள் பேச முடியுமா?
அவருக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதை விட.. அவருக்கு அடிப்படை அரசியல் தெரியவில்லை. அரசியல் பக்குவமில்லை. அரசியலில் எந்த விதமான புரிதலும் இல்லாமல் செயல்படுகிறார். மக்களுக்கு ஏதாவது அவர் செய்ய வேண்டும். மாறாக மின்சார துறை தாக்கலாமா.. மருந்து தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பலாமா.. ரேஷன் பற்றி வதந்தி பரப்பலாமா என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். எதையாவது செய்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கலாமா என்று நினைக்கிறார்.
எதை செய்தால் மக்களை தங்கள் பக்கம் இழுக்க முடியும். எதை செய்தால் பித்தம் தெளியும் என்று அவர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இது மோசமான செயல். என்ன ஒரு மட்டக்கரமான அரசியலை அவர் செய்கிறார். அவர்கள் நினைக்கிற மாதிரி ஏதும் இங்கே செய்ய முடியாது. மக்கள் அவர்களின் திட்டங்களுக்கு எல்லாம் வீழ மாட்டார்கள், என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டு உள்ளார்.
கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!