சென்னை: வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வரும் கோவையில்,  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., சார்பில், அக்டோபர் 31ம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தில் பங்கேற்குமாறு வணிகர்கள், வியாபார நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக சென்ற மாருதி கார், அங்கிருந்த சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். விசாரணையில், சம்பந்தப்பட்ட காரில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.  இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதையடுத்து முபின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது, அவரது டைரி உள்பட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அதில், கோவையில் 5 முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்க அவர் திட்டம்தீட்டியது அம்பலமாகி உள்ளது. மேலும் அவரதுவீட்டில் இருந்து 75 கிலோ வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை என்ஐஏ அமைப்பின் விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த வெடிவிபத்து, கோவை பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கோவை பாஜக அலுவலகத்தில் பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கி உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து சம்பவம் அதை உணர்த்தி உள்ளது என்றார். இந்த கார் வெடிவிபத்து சம்பவம் நடைபெற்றதும், விரைந்து வந்து டிஜிபி ஆய்வு செய்ததை வரவேற்கிறோம். ஆனால் அவர் சரிவர ஆய்வு செய்யாமல் சிலிண்டர் வெடித்துள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது,  அவரது பொறுப்பிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. டிஜிபி சிலிண்டர் ஏன் வெடித்தது என்பதில் தான் கருத்தை தெரிவித்திருக்க வேண்டும் என்று சாடினார்.

கார் வெடிவிபத்தில்  இறந்த நபர், இஸ்லாமிய தீவிரவாதிகளின் உறவினர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. சிறையில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதையும் மறுக்க இயலாது. தமிழக உளவுத்துறை அவரது நடவடிக்கையை கண்காணித்திருக்க வேண்டும். அவர்கள் கண்காணித்திருந்தாலும் அதில் தோல்வி அடைந்திருப்பதற்கான காரணத்தை தமிழக காவல்துறை சிந்திக்க வேண்டும். கடவுள் அருளால் மிக பெரிய விபத்து கார் வெடிப்போடு முடிந்துள்ளது என்றார்.

 சென்னைக்கு அடுத்து பொருளாதாரத்தில் உயர்ந்து  இருக்கின்ற மிக பெரிய நகரம் கோவை. அதனால்தான் தீவிரவாதிகள் கோவையை குறி வைக்கிறார்கள், இதை தகர்த்து எறிந்து விட்டால் அவர்களது அடுத்த குறி சென்னையாக தான் இருக்கும். கார் வெடிப்பில் இறந்த முபினின் வீட்டில் இருந்து  75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு ஒன்றரை டன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த விஷயத்தில் அனைத்து இஸ்லாமியர்களையும் நாங்கள் தீவிரவாதிகளாக பார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசியவர் இந்த வெடிவிபத்து சம்பவத்தில்,   தமிழகஅரசின் மெத்தன போக்கையும், தமிழக அரசு பயங்கரவாதத்தை மூட மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கண்டித்தும் பாஜக கோவை மாநகர மாவட்டம் சார்பில் அக்.31ம் தேதி பந்த் அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்று  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்த வேண்டுகோள் விடுக்கிறோம் என்றவர், இந்த பந்திற்கு, பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும்  வேண்டுகோள் விடுத்தவர், 

மேலும், பாஜக நடத்தும்  இந்த பந்த திற்கு திமுக உட்பட அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக, பாமக, மதிமுக என அனைத்து இயக்கங்களிடம் இருந்தும் ஆதரவு கோருகிறோம். மற்றவர்கள் இதனை முன்னெடுக்க வராத போது பாஜக தான் இதனை முன்னெடுக்க வேண்டி உள்ளது என்று தெரிவித்தார்.

காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். என்ஐஏ-வுடன் இணைந்து தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். தமிழக காவல்துறை என்ஐஏ-க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!