சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகம் குண்டுவெடிப்பு தொடர்பாக  சென்னை உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.  சென்னை யின் மண்ணடி, கீழக்கரை உள்பட சில பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில், கோவை கார் குண்டு வெடிப்புக்குபிறகு, என்ஐஏ சோதனை அடிக்கடி நடைபெற்று வருகிறது.  2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர்பாக திமுக அரசு மெத்தனமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் கைது செய்யப்படும் நபர்களும், அவர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்தான், பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை கைது  செய்து விசாரணை நடத்தி வரும் என்ஐஏ,  பெங்களூரு சிறையில் தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்க முயன்ற வழக்கில் தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மண்ணடி, முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.